Header Ads



தற்போதைய நெருக்கடிக்கு 2 தீர்வுகள் முன்மொழிவு - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன (முழு விபரம் உள்ளே)


நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு இன்று (05) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

இதன்போது, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண கட்சித் தலைவர்கள் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதகா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி பதவி விலகி பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்க வேண்டும் அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பவை குறித்த முன்மொழிவுகளாகும். 

எவ்வாறாயினும், அதற்கான எந்த ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்றத்தைக் கலைக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதனால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில கட்சிப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலுக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டியிருந்தனர். 

இதன்படி கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.