ஜனாதிபதியையும், ஊழல்வாதிகளையும் விரட்டியடிப்போம் - பொலிஸ் நாய்களே துப்பாக்கிச்சூடு நடத்தினர், 24 மணி நேரமும் உங்களுடனே இருப்போம்
“இளைஞர்களே துப்பாக்கி குண்டுகளுக்குப் பயப்படாதீர்கள். மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அஹிம்சைப் போராட்டத்தில் 24 மணி நேரமும் உங்களுடனே இருப்போம். ஒன்றிணைந்து தாய் நாட்டை மீட்டெடுப்போம். ஜனாதிபதியையும் ஊழல் வாதிகளையும் விரட்டியடித்த பின்பே இவ்விடத்திலிருந்தும் வெளியேறுவோம்” என ஸம்ஸம் பவுண்டேசனின் கல்விப் பிரிவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹக்கம்தீன் தெரிவித்தார்.
காலி முகத்திடல் மக்கள் போராட்ட களத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; நாங்கள் இறுதிவரை உங்களிடம் இருப்போம் என்பதை நான் ஆரம்பத்திலே உங்களுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அத்தோடு மதத்தலைவர்கள் என்ற வகையில் இந்த ஊழல் பேர்வழிகளான அரசியல்வாதிகளுக்கு எதிராக நாம் 24 மணி நேரமும் உங்களுடனே இருப்போம். என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கிறேன்.
இவ்வருடத்தில் மக்கள் அனைவரும் இன, மத பேதங்களின்றி ஒன்றிணைந்து இருப்பது ஒரே இலக்கை நோக்கியதாகும். இலங்கை வரலாற்றில் அனைத்து மதத்தவர்களும், இனத்தவர்களும் எவ்வித பேதங்களுமின்றி இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இங்கு கூடியிருக்கும் இளைஞர், யுவதிகள் இந்நாட்டின் சுதந்திரத்தை இங்கிருந்து ஆரம்பித்திருக்கிறீர்கள். இந்நாட்டின் முன்னேற்றத்துக்கு எனது இளம் காலத்தைப் பயன்படுத்தியுள்ளேன் என்று நீங்கள் என்றோ ஒரு நாள் நினைத்தால் அந்த மனத்திருப்தி மிகவும் பெறுமதியானதாகும்.
இந்தப் போராட்டம் மனிதாபிமானப் போராட்டம் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சர்வாதிகார கொடிய ஆட்சியாளர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். நீங்கள் எம் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டுமென்றால் ஒரு கோடி 20 இலட்சம் துப்பாக்கி ரவைகளை எடுத்து வாருங்கள். மொத்த மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள். அவ்வாறு இல்லாது இந்த அமைதியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. நிறுத்த முடியாது.
நீங்கள் கண்டிருப்பீர்கள் உங்களது கிராமங்களில், நகரங்களில் இறைச்சிக்கடைகள் இருக்கின்றன. இறைச்சிக்கடைகளின் முன்னால் நாய்கள் இருக்கின்றன. அந்த நாய்கள் அன்பானவைகள் அல்ல. அவ்வாறான பொலிஸ் நாய்களே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த நாய்களுக்கு நாம் பயமில்லை. எலும்புகளைச் சாப்பிடும் நாய்கள் எத்தனை வேண்டுமென்றாலும் வளருங்கள். நாம் அவைகளுக்குப் பயப்படப்போவதில்லை.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நேர்மையாக பணியாற்றும் பொலிஸ்காரர்களும் இருக்கிறார்கள். அவ்வாறான நேர்மையான அரச சேவையாளர்களான பொலிஸாருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் பலர், பல நாட்களாக நேர்மையாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் அவர்கள் மீது பெரிதும் அன்பு வைத்திருக்கிறார்கள். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பினை இல்லாமற் செய்து கொள்ளாதீர்கள் என்று நான் இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த மக்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கேட்டதற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவதென்றால், டீசல் கேட்டு போராடுவதற்காக சூடு நடத்துவதென்றால், எங்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக சூடு நடத்துவதென்றால் முழு சமுதாயத்துக்கும் சூடு நடத்துங்கள் என்றே நாம் கூறுகிறோம். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். எமது போராட்டத்தை நாம் அஹிம்சை வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்போம். அதனால் இளைஞர்கள் அஹிம்சைப் போராட்டத்துக்காக மேலும் மேலும் ஒன்றிணையுங்கள். எதற்கும் பயப்படவேண்டாம். எமக்கெதிராக சூழ்ச்சிகளை இரகசியமாக முன்னெடுத்து வருகிறார்கள். இந்த மிலேச்சத்தனமான செயலை முன்னெடுத்த அதிகாரிக்கு நாம் நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
துப்பாக்கிச் சூடு நடாத்திய அந்த அதிகாரிக்கு இந்த நீதிக்கட்டமைப்பில் விடுதலை, சுதந்திரம் வழங்கப்பட்டாலும் அவர்களது மனச்சாட்சி சுதந்திரம் அளிக்காது. அந்த மனச்சாட்சி அவர்கள் இறக்கும் வரை வேதனையளித்துக்கொண்டிருக்கும்.
அன்பான இளைஞர்களே நாம் எமது தாய் நாட்டை மீட்டெடுக்கவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நாம் எவரதும் பிரதிபலனை எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை.
வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்றுக்கொண்டு வாகனங்களில் இங்கு வந்து சேருவது எவரிடமிருந்தும் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்தல்ல. இந்தப் போராட்டத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிட்டு விடாதீர்கள். எமது தாய் நாட்டிற்காக, எமக்கிடையிலான நல்லுறவுக்காக நாம் எமது உயிரைப் பலி கொடுத்தேனும் உங்களுடன் தொடர்ந்தும் இருப்போம்.
இந்தப் போராட்டத்தை ஊழல்வாதிகளான ஆட்சியாளர்கள் திசை திருப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதற்கான தேவை அவர்களுக்கிருக்கிறது. அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். இந்தச் சூழ்ச்சியிலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களான நீங்கள் உங்களது பணம், உங்களது நேரம், உங்களது ஆளுமை அனைத்தையும் எமது தாய் நாட்டுக்காக தொடர்ந்தும் பயன்படுத்துங்கள்.
போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களது பயணத்தைத் தொடருங்கள். இளைஞர்களே ஒருபோதும் பின்வாங்காதீர்கள். ஒரு தேசிய சமூகமாக, ஒன்றிணைந்த சமூகமாக எழுந்திருப்பதற்கு எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
பசி, தூக்கம் என்பவற்றையெல்லாம் துறந்து நாங்கள் இங்கு வந்திருப்பது எமது தாய்நாட்டை நெருக்கடியிலிருந்தும் மீட்டு எடுப்பதற்காகும். அதனால் நாடெங்கும் உள்ள இளைஞர் யுவதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்.
அவர்களது துப்பாக்கிச் சூட்டுகளுக்குப் பயப்படாதீர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்வைத்த காலை பின் வைக்காதீர்கள். தாய் நாட்டுக்காக வீர இளைஞர் ஒருவர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதை மறந்து விடாதீர்கள்.
ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு நாம் அகப்படப் போவதில்லை. இந்தப் போராட்டத்தை மிலேச்சத்தனமாக மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை. நாம் பின்னடைந்தால் மிலேச்சத்தனமான பொலிஸ் அதிகாரியின் கொடிய செயலுக்கு நாம் பயந்தவர்களாகி விட்டதாக கருதப்படுவோம்.
எதற்கும், ஒருபோதும் பயப்படாதீர்கள். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். இந்த ஜனாதிபதியையும், அனைத்து ஊழல்வாதிகளையும் விரட்டியடிப்போம். அவர்களை விரட்டியடித்தபின்பே இந்த இடத்திலிருந்தும் வெளியேறுவோம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள் என்றார்.- Vidivelli
Post a Comment