Header Ads



பொருட்களின் விலைகள் 140 வீதம் வரை அதிகரிப்பு - பொதுமக்களால் சமாளிக்க முடியாத நிலை

 


ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் 60 வீதத்தில் இருந்து 140 வீதம் வரை அதிகரித்துள்ளன.

பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் மாத்திரம் உணவுப்பொருட்களின் விலையேற்றம் அல்லது உணவிற்கான பணவீக்கம் 29.5 ஆக அமைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் வரை, நாட்டில் பணவீக்கம் எனப்படும் பொருட்களின் விலையேற்ற வேகம் 10 வீதத்தை விடவும் குறைவாகவே அமைந்திருந்தது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் ஒரு சில பொருட்களின் விலை அதிகரித்த விதம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 161 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அது 91% அதிகரிப்பாகும்.

ஒரு லிட்டர் டீசலின் விலை 168 ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 139% அதிகரிப்பாகும்.

வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விலை 77 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி 147 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் சீனியின் இன்றைய விலை 260 ரூபாவாகும்.

இந்த காலப் பகுதியில் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை சுமார் 300 ரூபாவால் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 87 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்வதற்கு குறைந்தது 240 ரூபா தேவைப்படுகிறது.

400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட்டின் விலையும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இதுவரை 310 ரூபாவால் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 134 ரூபாவால் அதிகரித்த நிலையில், ஒரு இறாத்தல் பாணின் விலையும் 83 ரூபாவால் அதிகரித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி 1275 ரூபாவாக இருந்த ஒரு மூடை சீமெந்தின் இன்றைய விலை, 2850 ரூபாவாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதமளவில் அநேகமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரட்டிப்பிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் வழமையான செலவு 10,000 ரூபா தொடக்கம் 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் பேராதனை பல்லைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோறல குறிப்பிட்டார்.

எனினும், தனிநபர் வருமானம் எந்தவொரு வகையிலும் அதிகரிக்காமல் செலவுகள் மாத்திரம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.