Header Ads



இலங்கையின் நெருக்கடிகள் தீர்ந்து போக அமெரிக்கா உதவப் போகிறதாம், IMF இன் உதவியை நாடியமைக்கும் பாராட்டு, முக்கிய பங்காளர் என்றும் புகழாரம்


சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளமை மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் 70% மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்கை அடைவதற்கு திட்டமிட்டுள்ளமைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) தனது விஜயத்தின் நிறைவில் தெரிவித்துள்ள கருத்துக்களின் ஊடாக இந்த விடயம் உறுதியானது.

இன்று கொழும்பில் நடைபெற்ற இலங்கை – அமெரிக்க கூட்டு கலந்துரையாடலில் பங்கேற்ற அவர், பின்னர் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸூடன் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பிலும் பங்கேற்றார்.

இந்த ஊடக சந்திப்பில், அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பில் விக்டோரியா நூலண்டுடன் கலந்துரையாடியதாக G.L. பீரிஸ் குறிப்பிட்டார்.

இதனையடுத்து கருத்துக்கூறிய விக்டோரியா நூலண்ட்,

மிகவும் தீர்மானமிக்க கடினமான சந்தர்ப்பத்திலேயே நாம் இலங்கைக்கு வந்துள்ளோம். இலங்கை என்பது இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு வேண்டிய பங்காளர். இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாம் உங்களுக்கு உதவுகின்றோம். எமது பொருளாதார தொடர்புகள் மிகவும் முக்கியமானவை. COVID காலப் பகுதியிலும் எமக்கிடையிலான வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டன. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் தமது கடன் பிரச்சினை மற்றும் ஏனைய நிதித் தேவைகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்துள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம். பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து மேலும் வலுவடைவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நாம் பங்காளர்களாக இருப்போம்

என தெரிவித்தார்.

இதேவேளை, விக்டோரியா நூலண்ட் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி விக்டோரியா நூலண்டை தௌிவுபடுத்தியுள்ளார்.

கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது விக்டோரியா நூலண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக முதலீடுகளை செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கை என்பவற்றை விக்டோரியா நூலண்ட் இதன்போது பாராட்டியுள்ளார்.

1 comment:

  1. எனது பணத்தை நானே களவாடி பதுக்கிவிட்டு எனது பிள்ளைகளுக்கு பணமில்லை பணமில்லை என புலம்பினால் அதற்கு தீர்வு என்ன, அந்தநிலைதான் இலங்கை அரசு. எந்த சர்வகட்சி மாநாடும் பொருளாதார நிபுணர்களும் இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவமாட்டார்கள். அவர்கள் வைக்கும் சரியான தீர்வை செயற்படுத்த அரசாங்கம் கண்டிப்பாக முன்வராது. இனி இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வழி என்ன?

    ReplyDelete

Powered by Blogger.