Header Ads



அரசின் மீதுள்ள ஆத்திரத்தில், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்து விடாதீர்கள் - தயாசிறி


அரசாங்கத்தின் மீதுள்ள ஆத்திரத்தில் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துவிட வேண்டாமென சகல கட்சிகளிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுள்ளது.  நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு வலியுறுத்தப்பட்டதேயன்றி, தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக அல்ல என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார். 

மொனராகலையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , 

நாடு தற்போதுள்ள நிலைமையில், மக்களுடன் இணைந்து வீதிக்கிறங்கி போராடுவதைத் தவிர மாற்று வழியில்லை. பொருளாதார நிபுணத்துவமுடையவர்களுக்கு நிதி அமைச்சை வழங்காது, ஜனாதிபதிகள் நிதி அமைச்சர்களாக செயற்பட்டமையே, இன்றைய இந்த நெருக்கடி நிலைக்கு பிரதான காரணமாகும். 

இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார பேரவையில் எந்தவொரு பொருளாதார நிபுணர்களும் உள்வாங்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் பிரயோசனமற்றவை.  

எனவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

நாடு இவ்வாறு வீழ்ச்சியடையும்போது ஆக்கிரமிப்புக்கள் அதிகரிக்கும். 1,000பில்லியன் டொலர்களை தருவதாகக் கூறி,  இலங்கையின் பொருளாதார கேந்திர நிலையங்களை அமெரிக்கா கோரும். இதற்கு இடமளிக்கக் கூடாது. எனவே அரசாங்கம் அழைத்தது என்பதற்காக சர்வகட்சி மாநாட்டில் ஒதுங்கியிருக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைக்குமாறு ஏனைய கட்சிகளிம் கோருகின்றோம். 

அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு நாடு பழியல்ல. சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை, நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாத்திரமேயாகும்.  

மாறாக, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கல்ல. தேசிய அரசாங்கத்தில் இனியொரு போதும் சுதந்திர கட்சி அங்கத்துவம் வகிக்கப் போவதும் இல்லை: அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை என்றார்.  

No comments

Powered by Blogger.