Header Ads



நீதிமன்றங்கள் மதத்திற்கு விளக்கம் அளிக்கக் கூடாது, ஹிஜாப் இஸ்லாத்தில் பிரிக்க முடியாத பகுதி - பாப்புலர் ப்ரண்ட் இந்தியா


ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையான ஏமாற்றத்தை அளிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ.சலாம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி அல்ல என்று கூறி முஸ்லிம் மாணவிகளின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது கடுமையான ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீர்ப்பு அடிப்படை உரிமைகள் குறித்த அரசியலமைப்புச் சட்ட உயர் மாண்புகள் மற்றும் பன்முகத்தன்மையின் உணர்வுக்கு எதிரானது.

ஹிஜாபை தங்கள் நம்பிக்கை மற்றும் அடையாளத்தின் பிரிக்க முடியாத பகுதியாக முஸ்லிம் பெண்கள் கடைப்பிடிக்கும் நாட்டில் அவர்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் சற்றும் மதிப்பளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படை நூற்களில் இருந்து புரிந்து கொண்டு பின்பற்றும் நடைமுறைக்கு எதிராக மத நூல்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் நீதிமன்றம் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இதை ஏற்க முடியாது.

ஹிஜாப் விஷயத்தில் எழுப்பப்பட்ட கேள்வி முக்கியமாக, முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கான அடிப்படை உரிமை பற்றியதே தவிர, அது இஸ்லாத்தில் அவசியமா? அல்லது அவசியமற்றதா?  என்பதல்ல. ஒரு ஜனநாயக நாட்டில், மத நூல்களின் கருத்துக்களை விளக்கம் அளிப்பதற்கான உரிமையை அந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு  அளித்திருக்க வேண்டும்.

 ஹிஜாபை, காவி சால்வையுடன் ஒப்பீடு செய்ததன் மூலம், சங்பரிவாரின் தந்திர உபாயங்களில்  நீதிமன்றம் வீழ்ந்ததாக தெரிகிறது. முஸ்லிம் பெண்கள் தங்களின் விருப்ப ஆடைகளை தேர்வு செய்வதற்கு எதிராக வலதுசாரி குழுக்கள் அவர்களை துன்புறுத்துவதை இந்த தீர்ப்பு சட்டப்பூர்வமாக ஆக்கிவிடும் என்ற நியாயமான கவலை உள்ளது.

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த தீர்ப்பை நிராகரிக்கிறது. மேலும், இந்த தீர்ப்புக்கு எதிரான சட்டம் மற்றும் ஜனநாயக வழிமுறைகளை குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு சமுதாய தலைவர்களை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார் .

  - பி.எஸ்.ஐ.கனி

1 comment:

  1. உள்நாட்டு நீதிமன்றங்களில்
    நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் துடைத்தெறிந்துவிட்டு முடிந்தால் சர்வதேச நீதிமன்றங்களில் அது கிடைக்குமா என்று பார்ப்பதே இன்றய காலத்தின தேவை.

    ReplyDelete

Powered by Blogger.