Header Ads



இலங்கை வரலாற்றில் ஆட்சியாளரின் வீட்டுக்கு முன், மக்கள் போராட்டம் செய்வது இதுவே முதன்முறை


இலங்கையில் ஆட்சி செய்த பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு எதிராக வரலாற்றில் என்றுமே நடந்திராத வகையில் நாட்டின் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது வீட்டுக்கு எதிரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மக்களின் இந்த அரசியல் எழுச்சி புதிய திருப்புமுனையாக கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் மக்கள் ஜனாதிபதியோ அல்லது பிரதமரின் வீடுகளுக்கு எதிரில் இன்றைய தினத்தில் போல் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில்லை.

அந்தளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு மக்களை பாதித்துள்ளதை இது காட்டுகின்றது.

மிரிஹான எங்கிலிவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் இடத்தில் மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் இலங்கை தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை சாதாரணமாக கருதி செயற்பட்டு வந்தமையே நிலைமை இந்தளவுக்கு மோசமடைய காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மக்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சி வர முடியாது என்பதை இந்த ஆர்ப்பாட்டம் உணர்த்தி உள்ளதுடன் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர எண்ணி இருக்கும் நபர்களையும் ஆட்டம் காண செய்துள்ளதாக அரசியல் அவதானிகள் மேலும் கூறியுள்ளனர்.

இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களான பிரதமர்கள் இப்படியான மக்களின் எதிர்ப்பை தமது வீடுகளுக்கு அருகில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Tw

No comments

Powered by Blogger.