Header Ads



சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்படும் இலங்கை


இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளமை சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியுள்ளது.

இலங்கையில் இறக்குமதி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மட்டுமன்றி பல வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் காகிதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அச்சடிக்கும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது.

லொத்தர் சீட்டு அச்சடிக்கும் பணி சமீபத்தில் நிறுத்தப்பட்டதுடன், மின் கட்டண பட்டியல் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டது. சாதாரண மின்கட்டண பட்டியல் வழங்குவதற்கு பதிலாக சில பிரதேசங்களில் தற்காலிக மின் பட்டியல் வழங்கப்பட்டு வருகின்றது.

சில பகுதிகளில் மாதாந்திர மின்கட்டண பட்டியல் வழங்கப்படாமல் வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. காகித தட்டுப்பாட்டால் கல்வி அதிகாரிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

பரீட்சைகளுக்கு தேவையான வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் சர்வதேச ஊடகங்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட காகித தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பரீட்சைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் உள்ள 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நெருக்கடியில் உள்ளனர், மேலும் அடுத்த தர பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை தொடங்கவிருந்த பாடசாலை பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் அறிவித்ததாகவும் கார்டியன் தெரிவித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளதாக அல்-ஜசீரா இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்குதல் போன்ற அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அல்-ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரதான ஊடகமான NDTV செய்தி சேவையும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.