Header Ads



சத்தம் தொல்லையாக இருப்பதாக கூறியதால், கொலை செய்யப்பட்ட அமைச்சரின் சாரதி


அமைச்சர் காமினி லொகுகேவின் வாகன ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதேவேளை, சந்தேக நபரின் தந்தை மற்றும் சகோதரன் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி, வாள், இரண்டு உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தல்கள் மற்றும் தடி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நேற்றிரவு (21) இரவு 7 மணியளவில் கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவித்தர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அமைச்சர் காமினி லொகுகேவின் ஓட்டுனர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு முன்னால் பலத்த சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிள் ஒன்று பலமுறை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அப்போது கொலை செய்யப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே வந்து, சத்தம் தொல்லையாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை எச்சரித்துள்ளார். 

இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கும்பலுடன் வந்து குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த அமைச்சரின் வாகன ஓட்டுனர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கயான் கனிஷ்க (41) என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.