Header Ads



வாழ்நாளில் எந்த ராஜபக்சவையும் இனிமேல் ஆட்சிக்கு கொண்டுவரும் எதிர்ப்பார்ப்பு இல்லை - வீரவன்சா


அரசாங்கத்திற்கு இருக்கும் 113 பெரும்பான்மை பலத்தை இல்லாமல் ஆக்கி, தற்போதைய திமிர்ப்பிடித்த ஆட்சியை ஒழிக்க போவதாகவும் அழகற்ற அமெரிக்கருடன் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மாநாயக்க தேரர்களை இன்று -24- சந்திக்க சென்றிருந்த போது அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனிமேல் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் எந்த அர்ப்பணிப்புகளையும் செய்ய போவதில்லை. நாட்டை அழிவு பாதையில் இருந்து நல்ல வழிக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததன் பலனாக என்னையும், கம்மன்பிலவையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கினர்.

அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்துகிறதா அல்லது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பயன்படுத்துகிறார என்பது எமக்கு தெரியவில்லை. அனைவரும் இணைந்து பணியாற்றவே சர்வக் கட்சி மாநாடு கூட்டப்படும்.

இந்த மாநாட்டின் போது முன்னாள் பிரதமரை மரியாதை இன்றி பேசும் திமிர்ப்பிடித்த மனிதன் என்பதை நிதியமைச்சர் காண்பித்தார். சர்வக் கட்சி மாநாட்டின் மோதலை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இருந்தது.

எந்த ராஜபக்சவையும் இனிமேல் வாழ்நாளில் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவோம் என எவராவது கூறுவார் எனில் எமது பயணத்தை பார்த்து அஞ்சியே அவ்வாறு கூறுவார்.

எமது நாட்டை மற்றுமொரு நாட்டின் காலனியாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. சஜித் உருவாக்க முயற்சித்த சொர்க்கலோகத்தை விட தற்போதைய சொர்க்கலோகம் சற்று பயங்கரம் குறைந்தது.

சஜித்தின் சொர்க்கலோகம் உருவாகி இருந்தால், நாடு இந்தளவிலேனும் எஞ்சி இருக்காது என வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.