Header Ads



சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவுக்கும், அனுதாப அணுகுமுறைக்கும் இலங்கை நன்றி தெரிவிப்பு


சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சவூதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத்திடம் நேற்று கேட்டுக்கொண்டார்.

சவூதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் மற்றும் அவரது தூதுக்குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்த பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சந்தித்தார். இதன்போதே அமைச்சர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தார்.

சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை - சவூதி அரேபிய இருதரப்பு உறவுகளை முடிவுகள் சார்ந்த, பன்முகக் கூட்டாண்மையாக மாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

தற்போதைய உலகளாவிய சூழலில், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் வலுவான உறவுக்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஐ.நா.வில், குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் போது, இலங்கைக்கு சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவையும் அனுதாப அணுகுமுறையையும் அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

கொழும்புத் துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டையில் பிரத்தியேகமான மருந்து வலயங்கள், புதிதாக அடையாளம் காணப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், மட்டக்களப்பில் துணி / ஆடை வலயம் ஆகியவற்றில் சவூதி அரேபியாவின் முதலீடுகளை ஊக்குவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பது இருதரப்பு பங்காளித்துவத்தின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்குமிடையே ஏற்கனவே நிலவுகின்ற உற்சாகமான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், பொருளாதார ஒத்துழைப்பையும் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். சவூதி அரேபியாவை தற்போதைய எண்ணெய் சார்ந்த நிலையில் இருந்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான வழிமுறையாக, சவூதி அரேபியாவின் 2030 இலக்கை அவர் சுட்டிக் காட்டினார்.

No comments

Powered by Blogger.