உண்மை உரைத்ததால் எனது அமைச்சு ஜனாதிபதியால் பறிப்பு - பசிலே முழுக்காரணம் - அதன் விளைவுகளை விரைவில் சந்தித்தே தீருவார்
“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.”
-இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
தனது வீட்டில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் உள்ளிட்ட எனது கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிரணிப் பக்கம் அமரமாட்டோம். அரச பக்கம் இருந்தே சுயாதீனமாகச் செயற்படுவோம். எனக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைத்தே தீரும்.
எனது அமைச்சுப் பதவி பறிபோக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே முழுக்காரணம். அதற்கான விளைவுகளை அரசியல் ரீதியில் அவர் விரைவில் சந்தித்தே தீருவார்.
நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் சென்றமைக்கும் பஸில் ராஜபக்ச பதில் சொல்லியே ஆகவேண்டும்” - என்றார்.
Post a Comment