Header Ads



ஜெனீவாவில் ஏனைய நாடுகளின் ஆதரவை பெற முடியுமென இலங்கை நம்பிக்கை - தூதரகத்தில் முக்கிய பேச்சு, அலி சப்ரியும் தயார்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் ஒத்துழைப்புடன் தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான விவாதத்திற்கு முன்னோடியாக அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் ஜெனீவா நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

பூகோள இலங்கை பேரவை, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் இலங்கையிலிருந்து சென்றிருந்த வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான அரசாங்க தூதுக்குழு இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பிலும் அதற்கு வெற்றிகரமாக பதிலளிப்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கை தூதுக்குழுவில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் விடயங்களை முன் வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனாத் கொளம்பகே ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.

இம்முறை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பிலான விவாதம் நாளை மறுதினம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெற்ற 46 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் (46/1)அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் 49வது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன


லோரன்ஸ் செல்வநாயகம்

1 comment:

  1. System is decayed and the corruption is rampant in every nook and corner of the country, as such a simple and perhaps an attractive and colorful presentation for the world community will not serve the purpose. It is quite obvious that the team will return with a sheer disappointment and devastation.

    ReplyDelete

Powered by Blogger.