மாவனல்லை - வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசலின் சிறந்த முன்மாதிரி
- அஸ்ஹர் ஹாஸிம் -
கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை தேர்தல் தொகுதியில் வயல்கடை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் தொழுகையாளிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகிய சூழலில் அமையப் பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகளுக்கு பயன்தரும் பல திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
மலையகத்தின் நுழைவாயிலாம் மாவனல்லையிலிருந்து கண்டியை நோக்கி செல்லும் பொழுது ஹிங்குள்ளை சந்தியினூடாக அளுத்நுவர பாதையில் 3 கி.மீ தூரத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் இப் பள்ளிவாசல் அமையப் பெற்றுள்ளது. இதன் கட்டிட அழகும் சுற்றியுள்ள பூங்கா அமைப்பும் கண்ணை கவர்வனவாகும்.
1943 இல் தக்கியாவாக அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் 2001 ஆம் ஆண்டு முதல் உயன்வத்தை மஸ்ஜிதுன் நூர் தாய்ப் பள்ளியின் பரிபாலனத்தின் கீழ் ஜும்ஆ பள்ளிவாக தரமுயர்த்தப்பட்டது. பின்னர் அவசியம் கருதி பள்ளிவாசல் இரண்டு மாடிக் கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டது.
பள்ளியின் அழகிய மினாரா, மிம்பர் மற்றும் அறபு எழுத்தணிகள் கண்களைக் கவர்வனவாகும். இந்த ஊரினூடாக பயணம் செய்யும் பெண் பிரயாணிகள் தொழுவதற்கும் மலசலகூட வசதிகளை பயன்படுத்துவதற்கும் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப் பள்ளிவாசலில் சகலருக்கும் முன்மாதிரியான நலன்புரி வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். கீழ் மாடி வெளிப்பள்ளியில் அழகிய அமைப்பில் பசித்தவர்களுக்கு உதவுவதற்காக உணவு வங்கி பெட்டியொன்றையும் அமைத்துள்ளது.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ உங்கள் தேவை என்ன என்று அல்லாஹ் நன்கு அறிவான். நீங்கள் ஒரு தொழுகையாளியாயின் உங்கள் வீட்டில் இன்றைய நாள் உணவுக்கு கஷ்டம் இருப்பின் இங்கிருந்து ஒரு பொதியைப் பெற்று உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இது போன்று இன்னொருவரின் தேவையை நிறைவேற்ற விரும்பினால் உங்களால் முடியுமான ஒரு பொதியை இங்கே வைக்கலாம். அதே போன்று படைத்த ரப்பையும் கொடுத்து உதவிய. கரங்களையும் மறக்காமல் நன்றி செலுத்துங்கள். கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் சூழலை மெருகூட்டும் வகையில் பள்ளியைச் சுற்றி வர பூந்தோட்ட அமைப்பும் காணப்படுகிறது. நுவரெலியா உட்பட பல பாகங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ள மலர்ச் செடிகளும் உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு வகையான மரங்களும் கண்களைக் கவர்வதுடன் பள்ளிவாசலை நோக்கி மக்களை ஈர்ப்பனவாகவும் உள்ளன.
வட்ட அமைப்புக்களாக வரிசை அமைப்புக்களாக பூஞ்செடிகள் பள்ளியைச் சுற்றிக் காணப்படுவதோடு மக்களின் கண்களைக் கவரக்கூடிய பல வகையான, பல நிறங்களை கொண்ட பெரிய மீன்களும் தொட்டிகளில் இடப்பட்டுள்ளன.
தூரத்தே தெண்படும் தெவனகல குன்றும் பதலேகலக் குன்றும் நாமெல்லாம் ஒன்று என வனப்புக் கூறுகின்றன. ஹிங்குள்ள அழுத்நுவர பாதையால் செல்வோர் இப்பள்ளிவாசலின் அழகினால் கவரப்பட்டு மன நிறைவாக தொழுது விட்டுச் செல்கின்றனர்.
இப் பள்ளிவாசலில் முறையாக பேணப்படும் சுற்றுச் சூழலும் இங்கு அமுல்படுத்தப்படும் உணவு வங்கித் திட்டமும் ஏனைய பிரதேச பள்ளிவாசல்களுக்கும் முன்மாதிரிமிக்கனவாகும்.- Vidivelli
Mashallah mabrook
ReplyDelete