முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும் தொல்லைகளும் அதிகரித்துள்ளது - நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் முறையிட்டார் ஹக்கீம்
யுத்த வெற்றியின் பின்னர், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இனங்களுக்யிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் பதிலாக , அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பொதுவாக சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) , நியூiஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெடன்(Michael Appleton) தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டினார்
இலங்கைக்கும் மாலைதீவிற்கும் மான நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லிடன்(Michael Appleton), முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையத்தில் புதன்கிழமை (2) சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய நெருக்கடியாக அரசியல் கள நிலவரத்தை மையப்படுத்தியதாக உரையாடல் இடம்பெற்றது.
நியூஸிலாந்தில் இடம்பெற்ற கோரமான கிரைஸ்ச் சேர்ச் பள்ளிவாசல் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து அந் நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன்(Jacinda Ardern) மிகவும் சிறப்பான விதத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார் என ஆரம்பத்திலேயே அவர் உயர்ஸ்தானிகரிடத்தில் நன்றி தெரிவித்தார்.
பிரஸ்தாப சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சிறுபான்மை சமூகத்தினர் அநேகர் போதிய சாட்சியங்களின்றி கைது செய்யப்பட்டு, வருடக்கணக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டு அதற்குப் பகரமாக வேறு சட்டம் கொண்டுவரப்படலாம். ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களையும் மீறி,அதில் அரசாங்கத்துக்கு தேவையான விதத்தில் சில திருத்தங்களை மட்டும் செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
நான் முன்னர் நீதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தேன்.
அந்த தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.ஆனால், அனைத்தும் மர்மமாக இருக்கிறது.
அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கு அதன்மீது இப்போது வெறுப்பு அதிகரித்துள்ளது அரசாங்கம் சரிவர பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யாதன் விளைவாக நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) தஞ்சடைந்திருக்க வேண்டிய காலகட்டம் தாமதமாகிவிட்டது.ஆனால், இன்னும் முடியும். எதற்கெடுத்தாலும் கொவிட் 19 தொற்றைக் காரணம் காட்டி சமாளித்து கொண்டு போகின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பலவிதமான தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் முஸ்லிம் எங்களது சமய, கலாச்சார ஆடைகள் அணிவதற்கு பெரும்பாலும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
எங்களது நிலபுலங்கள் ஆக்கிரமிக்க படுகின்றன பலங்கொடை, தப்தர் ஜைலானி போன்ற முஸ்லிம்களின் பாரம்பரிய புராதன இடங்கள் கூட பறிக்கப்படுகின்றன.
முஸ்லிம்களின் விவாக விவாகரத்து சட்டத்திலும்(MMDA) பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளனர்
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் தாமதமாக்கிக் கொண்டே போகின்றனர் என்றார்.
இலங்கை மக்களின் நலனில் நியூஸிலாந்து அரசாங்கம்)கரிசனையுடனிருப்பதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் எழுதிய இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு நூலின் பிரதியொன்றையும் உயர்ஸதானியரிடம் கையளித்தார்.
உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் செல்வி சுமது ஜயசிங்ஹ (Sumudu Jayasinghe)மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் (Rahmath Munsoor)ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.
Post a Comment