கிரிக்கெட் விளையாடுபவரா நீங்கள்..? அதில் ஆர்வமுள்ளவரா தாங்கள்..?? இதோ புத்தம் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை லண்டன் லோர்ட்ஸில் செயற்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) மேற்கொண்டு வருகிறது.
இந்த கழகத்தினால் முன்வைக்கப்படும் விதிகளுக்கு
அனுமதி வழங்கி அமுல்படுத்துகிறது. இந்த நிலையில் தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் எம்.சி.சி. சில திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளது.
மன்கட் முறை
எதிர்முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும்போது பந்துவீச்சாளர் அவரை ஆட்டமிழக்க செய்வது (மன்கட் முறையில்) தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுவந்தது.
இவ்வாறானதொரு விதிமுறை அமுலில் உள்ளதென்றாலும் அது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோஸ் பட்லரை இந்த முறையில் ஆட்டமிழக்க செய்தமை பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாறு ஆட்டமிழக்க செய்வது முன்பு நேர்மையற்ற ஆட்டம் என்ற பிரிவில் விதிமுறை 41 இல் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறை 38க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் இத்தகைய முறையில் ஆட்டமிழக்க செய்யும் போது அதிகாரபூர்வமாக ரன் - அவுட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பந்துவீச்சாளர்கள் பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
எச்சிலால் பந்தை பளபளப்பாக்குதல்
எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்கும் போது பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பது பந்துவீச்சாளர்கள் தரப்பு வாதம். இது குறித்து ஆய்வு செய்ததில், அத்தகைய பெரிய அளவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. வியர்வையால் பந்தை தேய்த்து வீசுவது அதற்கு நிகரானது என்று கூறியுள்ள எம்.சி.சி. இனி பந்தில் எச்சிலை தடவுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
புதிய வீரருக்கே துடுப்பாட வாய்ப்பு
முன்னதாக பந்துவீச்சாளர் பிடியெடுப்பில் ஆட்டமிழக்க முன்னதாக எதிர்முனையில் நிற்கும் வீரர் துடுப்பாட்ட முனைக்கு ஓடி விட்டால் அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இனிவரும் காலங்களில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தால், புதிதாக களம் இறங்கும் வீரரே அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். எனினும், ஓவரில் இறுதி பந்தில் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தால் இந்த விதிமுறை பொருந்தாது.
அகலப் பந்தை கணக்கிடுதல்
சில சந்தர்ப்பங்களில் துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்களை குழப்புவதற்காக அவர்கள் பந்து வீச ஓடி வரும்போது, ஸ்டம்பை விட்டு சற்று தூரம் விலகி நின்று துடுப்பாடுவதுண்டு. இதனால் பந்துவீச்சாளர்கள் தடுமாறி அகலப்பந்து (Wide) வீசும் நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, களத்தில் துடுப்பாட்ட வீரர் எந்த இடத்தில் நின்று பந்தை எதிர்கொள்கிறாரோ அதில் இருந்து அகலப்பந்து கணக்கிடப்படும். இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.
களத்தடுப்பாளரின் அநாவசிய நகர்வு
பந்து வீசும் போது களத்தடுப்பாளர்கள் நியாயமற்ற முறையில் நகர்ந்தால் அந்த பந்து ‘டெட் போல்’ என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களத்தடுப்பாளர் நியாயமற்ற முறையில் வேண்டுமென்றே இவ்வாறு நகர்வது உறுதியானால் ‘டெட் போல்’ என்று அறிவிக்கப்படுவதோடு துடுப்பாடும் அணிக்கு 5 ஓட்டங்கள் உதிரியாக வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட முக்கிய திருத்தங்கள் உட்பட 9 திருத்தங்களை எம்.சி.சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய விதிமுறைகள் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் அமுலுக்கு வர உள்ளதாக எம்.சி.சி அறிவித்துள்ளது.
Post a Comment