“இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை ஒருவருக்கு வழங்குவதும் அதைப் பிடுங்கி எடுப்பதும் வழமையாகிவிட்டது.
-இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிக் கதிரையில் ஏற்றி அழகு பார்க்க எண்ணினோம். பல சவால்களுக்கு மத்தியில் இறுதியில் எமது ஆசையை நிறைவேற்றினோம்.
ஆனால், ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்குகின்றோம் என்ற பெயரில் சிலர் அவரை அவமரியாதைக்கு உட்படுத்தியது மட்டுமன்றி நாட்டையும் சீரழித்தனர்.
இது தொடர்பில் நாம் கேள்விகளை எழுப்பியபோதே எம் மீது அம்பு பாய்ந்தது. நானும் விமல் வீரவன்சவும் அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டி வந்தது.
இந்தச் சதிவேலைகளுக்குத் தலைமை தாங்கியவர் வேறு யாருமல்லர். அவர்தான் அடுத்த தடவையாவது ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவுடன் செயற்பட்டு வருகின்றார்.
அமெரிக்கப் பிரஜையான அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடியதை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறக்கமாட்டார் என்று நம்புகின்றோம்.
ஒரே குடும்பத்துக்குள் இருந்து குழிபறிக்கும் செயல்களில் ஈடுபடும் அவரைத் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அழைத்தது படுமுட்டாள்தனமானது” - என்றார்.
Post a Comment