ஜெய்லானியில் உள்ள கட்டுமானங்கள் இடிக்கப்பட்டமை முஸ்லிம்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
முஸ்லிம்களிடத்தில் தப்தர் ஜெய்லானி 8 நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, இது பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் கலாச்சார, பாரம்பரிய தளமாகவும் இருந்து வருகிறது. இந்த இடம் 12 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த சூஃபி துறவியும் காதிரி சூஃபி வழிமுறையின் ஸ்தாபகருமான அஸ்-ஸெய்யத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி என்பவரின் பெயரைப் பெற்றுள்ளது.
காலணித்துவ ஆய்வுகளின் ஒரு பகுதியாக இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தை 1930களின் முற்பகுதியில் ஆய்வுசெய்த பிரிட்டனின் தொல்பொருள் ஆய்வாளரான சி.எச். கொல்லின்ஸ், 1932 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், “இது முஸ்லிம்களின் புனித யாத்திரைக்கான சிறந்த இடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பளிக்கப்பட்ட புராதன தளமான இவ்விடத்தில் புதியதோர் பௌத்த தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை, தப்தர் ஜெய்லானியின் முக்கிய கொடிக் கம்பம் மற்றும் செதுக்கிய கற்படிகளுடன் கூடிய அலங்கார நுழைவாயல் இடிக்கப்பட்டமை வருத்தமளிக்கிறது.
தனிச் சிறப்புமிக்க முஸ்லிம் பாரம்பரிய தளமொன்றை வேண்டுமென்றே அழிப்பது, சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவிப்பதற்கு பதிலாக, வெறுப்புணர்வு, சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை மற்றும் பிளவுகளையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.
அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசத்தின் பார்வையிலும், குறிப்பாக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும். ஐநா மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத் தொடர் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த இடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் சமூக அடையாளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மற்றும் எங்கிருந்து அத்தகைய வெறுப்புகள் தூண்டப்பட்டன போன்றன குறித்து விரிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டாலும், குற்றம் இளைத்தவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் தொடர்ந்தும் எடுக்கப்படாமல் இருப்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் 2021 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி உறுதியளித்ததன் பின்னர் இந்த முஸ்லிம் பாரம்பரிய தளம் இடிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஏனைய சமூகங்களுடன் சமாதானமாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மத, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து, தப்தர் ஜெய்லானியில் உள்ள முஸ்லிம் புராதனச் சின்னத்தை மீள்கட்டமைத்து, பாதுகாக்க அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்!
முஸ்லிம் கலாசார அமைச்சில் அன்சார் என பென்சன் போன ஒருவர் வந்திருக்கின்றார்,அவர் இந்த விடயத்தில் என்ன செய்கின்றார் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது. அன்சார் மஹிந்தவுக்கு காக்கா பிடித்து பதவிக்கு வந்தார் எனக்கூறுகின்றனர்.
ReplyDeleteஇதில் இருக்கும் ஆச்சரியம் என்ன என்றால் எங்களுக்குளே இருக்கும் மடையர்கள் ஸியாரம் உடைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அவர்கள் இவ்வாறு சொல்லுவது மட்டுமில்லை சில துவேஷ அந்நிய துறவர்களுக்கும் அதை பற்றி சொல்லி கொடுத்து அவர்கள் முஸ்லிம்களின் பாரம்பரிய இடத்தை அழிக்கிறார்கள்.
ReplyDelete