என்னை ஆத்திரமூட்டாதீர்கள், சூபி முஸ்லிம்களை நான் கெளரவப்படுத்துகிறேன் - ஜெய்லானி பள்ளிவாசல் மினாரா அகற்றப்பட்டது பிரச்சினையல்ல,
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூரகல ஜெய்லானி பள்ளிவாசல் மினாரா கட்டமைப்பு அமைந்துள்ள பாதை அவசியமற்றதாகும். அதனால் மினாரா அகற்றப்பட்டதில் எந்த பிரச்சினைகளும் இல்லை என தெரிவித்துள்ள கூரகல புனித பூமிக்குப் பொறுப்பான வத்துகும்புரே தம்மரதன தேரர், விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். என்னை ஆத்திரமூட்டாதீர்கள். இவ்விவகாரத்தை அடிப்படைவாதத்துக்கு இட்டுச்செல்லாதீர்கள். சூபி முஸ்லிம்களை நான் கெளரவப்படுத்துகிறேன். என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு வாருங்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.
கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் மினாரா கட்டமைப்பு அண்மையில் இனவாதிகளால் அகற்றப்பட்டமை தொடர்பில் வினவியபோதே கூரகல வத்துகும்புரே தம்மரதன தேரர் விடிவெள்ளிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; கூரகல புனித பூமி அபிவிருத்தித்திட்டம் தற்போது துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புனித பூமியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் ஸியாரம் மற்றும் கொடிகம்பம் என்பன அகற்றப்படமாட்டாது. இவை அபிவிருத்தி செய்யப்படும். ஸ்ரீபாத போன்று இப்பகுதி அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும்.
ஜெய்லானி பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் வக்பு சபை என்பனவற்றுக்கு கடிதங்களை அனுப்பி வைத்தேன். ஆனால் வக்பு சபையோ, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையோ என்னுடன் பேசவில்லை. கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. நானே கொழும்புக்கு வந்து உலமா சபையைச் சந்தித்தேன். ஆனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. அன்று பிரச்சினையை தீர்த்துக்கொண்டிருக்க முடியும். இன்று பூதாகரமாகிவிட்டது.
இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்தாலும் முஸ்லிம்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் சபை ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள். ஆனால் என்னுடன் பேசவில்லை. என்னுடன் பேசுங்கள் என்றே கூறுகிறேன்.
இவ்விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.
தற்போது கூரகலயின் பழைய பாதை பள்ளிவாசலுக்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படுவதில்லை. புதிய வீதிக்கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. எனவே மினாரா கட்டமைப்பு அமைந்துள்ள பாதை அவசியமற்றதாகும். அதனால் மினாரா அகற்றப்பட்டதில் எந்த பிரச்சினைகளும் இல்லை.
கூரகல அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் முஸ்லிம்கள் என்னுடன் கலந்து பேச முன்வரவேண்டும். கூரகல பகுதி தொல்பொருள் வலயமாகும். இங்குள்ள பிரச்சினைகளை கலந்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம். சூபி முஸ்லிம்கள் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அல்லாது சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அடிப்படைவாதத்தைப் பரப்புவதனால் நன்மை கிடைக்கப்போவதில்லை.
அத்தோடு நாம் ஏதும் தவறு செய்திருந்தால் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துங்கள். கூரகல பகுதி பெளத்தர்களின் தொல்பொருள் வலயமாகும். நான் ஏதும் குற்றங்கள் செய்திருந்தால் பொலிஸில் முறைபாடு செய்யுங்கள் என்றார்.
Vidivelli
Don´t belive this Guy.
ReplyDelete