Header Ads



20 க்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பமாட்டேன் - முஸ்லிம் மக்களை நம்புகிறேன்


பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முஸ்லிம் பகுதிகளில் நடத்துவதற்கு யாரும் தலைமைதாங்க முன்வருவார்களானால் அவர்களுடன் இணைந்து அப்பகுதிகளில் போராட்டங்களை நடத்த தயாராகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

தாங்கள் 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருபோதும் நம்பாவிட்டாலும் முஸ்லிம் மக்களை நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடியிலும் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சர்வானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரையும் தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்யலாம் என்ற காரணத்தினாலேயே இந்த சட்டத்தினை முழுமையாக நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம். 

வெளிவிவகார அமைச்சின் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த கூட்டத்தினை நாங்கள் பகிஸ்கரித்தோம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ஒழிக்கும் வரைக்கும் எங்களது போராட்டம் தொடரும். தற்போது கையெழுத்து போராட்டமாக நடைபெறும் இந்த போராட்டம் எதிர்காலத்தில் பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும். 

இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் இரண்டு வருடமாக கேட்டுக்கொண்ட சந்திப்பினை ஜனாதிபதி தற்போது ஏற்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பினை வைத்துக்கொண்டு எங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்றும் அளவுக்கு நாங்கள் இருக்கப்போவதில்லை. நீண்டகாலமாக தமிழ் மக்களின் தீர்க்கப்படாத நிலையில் உள்ள அரசியல் தீர்வு விடயத்திற்கு நாங்கள் முன்னுரிமை வழங்க தீர்மானித்திருக்கின்றோம். 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட 20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. 

தலைமைத்துவம் இருக்கம்போதே மக்கள் எதனையும் செய்யமுடியும். யாராவது முன்வந்து முஸ்லிம் பிரதேசங்களில் முன்வந்து இந்த கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுப்பார்களானால் அதனை செய்யமுடியும். திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அதற்கான ஆதரவினை வழங்கியுள்ளார். இந்த 20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை. முஸ்லிம் மக்களை நம்புகின்றேன். 

எங்கும் நாங்கள் யாரையும் இந்த போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. பல இடங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றது இந்த போராட்டத்தினை தங்களது பகுதிகளிலும் முன்னெடுக்குமாறு. இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது முஸ்லிம் மக்களுக்கும் ஆபத்தானது என்ற காரணத்தினால் அவர்களது ஆதரவு இதற்கு கிடைக்கும். இலங்கையில் எப்பகுதியில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தாலும் அதில் கலந்துகொள்வதற்க நான் தயாராகயிருக்கின்றேன். 

- கிருஷ்ணகுமார்-

No comments

Powered by Blogger.