இராணுவத்திற்கு நன்றி, மஜ்மா நகர் மையவாடி முழு உலகுக்கும் முன்னுதாரணம் - 'தேசிய கொவிட் 19 நல்லடக்க பூமி' என்ற ஞாபகார்த்த சின்னமும் நிர்மாணிக்கப்படும்
கொவிட் சடலங்களை நாட்டின் எப்பாகத்திலும் அடக்கம் செய்யலாம் என அனுமதியளிக்கும் தீர்மானம் சடுதியாக எடுக்கப்பட்டதா?
இல்லை. இது குறித்து கடந்த பல மாதங்களாக ஆராயப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் கூடிய சுகாதார அமைச்சின் விஞ்ஞான, தொழில்நுட்பக் குழு சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்தது. இதன்போது பல்வேறு தரப்புகளிடமிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே கொவிட் சடலங்களை ஓட்டமாவடியில் மாத்திரமன்றி நாட்டின் எப்பாகத்திலும் அடக்கம் செய்ய அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறெனின் இதற்கான சுகாதார வழிகாட்டல்கள் என்ன?
நாம் கடந்த வாரம் வெளியிட்ட சுற்று நிருபத்தில் இதற்கான வழிகாட்டல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொவிட் தொற்று இனங்காணப்பட்ட 7 நாட்களுக்குள் ஒருவர் மரணித்தால் அவரது உறவினர்கள் 10 முதல் 12 பேர் வரை வைத்தியசாலைக்குச் சென்று இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள முடியும். பின்னர் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்லாது நேரடியாக அடக்கவோ அல்லது எரிக்கவோ முடியும். சடலத்திற்கான பெட்டி மற்றும் போக்குவரத்துச் செலவுகளை குடும்பத்தினரே பொறுப்பேற்க வேண்டும்.
உதாரணமாக, கொழும்பிலுள்ள முஸ்லிம் நபர் ஒருவர் கொவிட் தொற்றினால் மரணித்தால் அவரை மாளிகாவத்தை மையவாடியில் அடக்கம் செய்யலாம். நாம் வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி விரும்பிய மையவாடிகளில் அடக்கம் செய்யும் பணிகளை முன்னெடுக்கலாம்.
அதேபோன்று சடலங்களை தமது சமய வழிமுறைகளின்படி எரிக்க விரும்புபவர்கள் தாம் விரும்புகின்ற சுடலைகளுக்குக் கொண்டு சென்று எரிக்கலாம். ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள சுடலைகளில் மாத்திரமே எரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கொவிட் சடலங்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழக்கப்படவில்லை. மரணம் நிகழ்ந்து 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்ட 7 நாட்களுக்குள் அவர் மரணித்தால் அவரை 24 மணி நேரத்தினுள் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக மையவாடி அல்லது சுடலைக்கு கொண்டு செல்ல வேண்டும். மாறாக கொவிட் தொற்று அடையாளப்படுத்தப்பட்டு 7 நாட்களுக்குப் பின்னர் மரணித்தால், அவர் கொவிட் தொற்றினால் மரணித்தவராக இனங்காணப்படமாட்டார். அவரை சாதாரணமான மரணம் போன்று வீடுகளுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
ஓட்டமாவடியில் சடலங்களை அடக்கம் செய்யும் பணியை சுகாதார அமைச்சின் சார்பில் ஒருங்கிணைத்தவர் என்ற வகையில் அது பற்றிய அனுபவத்தைக் கூறுங்கள்?
2021 மார்ச் 5 ஆம் திகதி முதல் 2022 மார்ச் 5 ஆம் திகதி வரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடியில் இடம்பெற்றன. இப் பணிகளை சுகாதார அமைச்சின் சார்பில் நானே ஒருங்கிணைத்தேன். இக் காலப்பகுதியில் எல்லா சமூகங்களையும் சேர்ந்த 3634 பேரின் உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் – 2992, பௌத்தர்கள் – 287, இந்துக்கள் – 270, கிறிஸ்தவர்கள் – 85 என்ற ரீதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆண்கள் 2225 பேரும் பெண்கள் 1409 பேரும் இதில் அடங்குவர்.
இது உண்மையில் ஒரு கஷ்டமான பணி. மக்களின் உணர்வுகளுடன் ஒன்றித்த விடயம். எனினும் இவற்றுக்கு மத்தியில் இப் பணியை நாம் முடிந்தளவு நேர்த்தியாக செய்துள்ளோம்.
இப் பணியை முன்னெடுப்பதில் பல தரப்பினர் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அது பற்றி?
இதில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு உள்ளது. அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மிகப் பாரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள். இரவு பகலாக எந்தவித சளைப்புமின்றி அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். இதில் மஜ்மா நகர் மக்களின் ஒத்துழைப்பையும் மறந்துவிட முடியாது.
நாடளாவிய ரீதியில் சுமார் 10 இணைப்பாளர்கள் தொண்டர்களாக செயற்பாட்டாளர்கள். அவர்களிடமிருந்தே கொவிட் மரணங்கள் குறித்த தகவல்கள் எனக்கு கிடைக்கும்.
அடுத்ததாக இலங்கை இராணுவத்தினருக்கு நான் விசேடமாக நன்றி கூற வேண்டும். அவர்கள் மிகவும் சிறப்பான பங்களிப்பை இதுவிடயத்தில் வழங்கியுள்ளார்கள்.
ஓட்டமாவடிக்கு சடலங்களை கொண்டு செல்லும் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன. அதில் இராணுவத்தினர் என்ன பங்களிப்பை வழங்கினார்கள்?
இராணுவத்தினர் மிகவும் பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் இப் பணிகளை முன்னெடுத்தனர்.
மரணங்கள் நிகழும் நேரத்தை எம்மால் கணிக்க முடியாது. சில நாட்களில் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்ல வேண்டிய சடலங்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்தும் தயாரான பின்னரும் மரணங்கள் நிகழும். பின்னர் அந்த சடலங்கள் வரும் வரையும் பொறுமையோடு காத்திருந்து இராணுவத்தினர் அவற்றை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்வார்கள்.
உதாரணமாக ஒரு நாளில் 10 சடலங்கள் சேர்ந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை நான் வழங்குவேன். அந்த 10 சடலங்களையும் கொண்டு செல்லக் கூடிய வசதியுள்ள வாகனத்தை இராணுவத்தினர் தயார்படுத்தி அவற்றில் சடலங்களை ஏற்றுவார்கள். 11 ஆவது சடலம் வந்துவிடுமானால் நாம் அதனை விடப் பெரிய வாகனத்தை தயார் செய்ய வேண்டும். மீண்டும் சடலங்களை அதற்கு மாற்ற வேண்டும். ஒரு வருட காலமாக இடம்பெற்ற இந்தப் பணி இலகுவானதல்ல. இராணுவத்தினர் முகம்சுழிக்காமல் இதனைச் செய்தார்கள்.
கொழும்பிலிருந்து சடலங்களை ஏற்றிய வாகனம் சரியாக காலை 7 மணிக்கு ஓட்டமாவடி நோக்கிப் புறப்படும். அன்றிரவு 2 மணியளவில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதனை 7 மணிக்குள் கொண்டு வந்து சேர்ப்பது கடினம். அதனால் சில சமயங்களில் 8.30 மணி வரை காத்திருந்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நெகிழ்வுத்தன்மையுடனே இந்த விடயங்கள் கையாளப்பட்டன.
இது விடயத்தில் கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம், நாடளாவிய ரீதியில் உள்ள ஜனாஸா சங்கங்கள், மேலும் பல தொண்டு நிறுவனங்கள், குழுக்கள் பங்களிப்புச் செலுத்தின. இவர்கள் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிடின் இதனை வெற்றிகரமாக செய்திருக்க முடியாது. அவர்கள் அனைவருக்குமான கூலிகள் நிச்சயம் இந்த உலகிலும் மறு உலகிலும் கிடைக்கும்.
மஜ்மா நகரில் காணியை வழங்கிய மக்களுக்கு நஷ்டயீடுகள், உதவிகள் வழங்கப்படுமா? ஓட்டமாவடி பிரதேச சபை தமக்கு அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறுகிறதே?
சடலங்கள் அடக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட காணி வெற்று நிலம். அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. இந்த நிலம் பிரதேச சபைக்குச் சொந்தமானது எனில் அதனை அபிவிருத்தி செய்யத் தேவையான நிதியை அவர்கள் தேசிய கொவிட் செயலணியிடம் கோர முடியும்.
எனினும் கடந்த காலங்களில் இந்தப் பணியை முன்னெடுப்பதற்கு நிதித் தேவைகள் ஏற்பட்டபோது பல தனவந்தர்கள் மூலமாக அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொடுத்தோம். எனக்கு ஊடாகவும் அவ்வாறான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
நான் மூன்று தடவைகள் ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு விஜயம் செய்துள்ளேன். இதன்போது அங்குள்ள பிரச்சினைகள் எனக்கு கூறப்பட்டன. அவற்றுக்கான தீர்வுகள் தனவந்தர்கள், நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டன.
எதிர்காலத்தில் இந்த மையவாடி எவ்வாறு நிர்வகிக்கப்படவுள்ளது?
இந்த மையவாடியைச் சூழ மதில் நிறுவப்படவுள்ளதுடன் அதனோடிணைந்ததாக ‘தேசிய கொவிட் 19 நல்லடக்க பூமி’ என்ற வகையில் ஞாபகார்த்த சின்னமும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
சகல சமயங்களையும் சேர்ந்த மக்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் உலகிலேயே ஒரு முன்மாதிரிமிக்க அடக்கஸ்தலமாக இது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என நம்புகிறேன். இவ்வாறான ஒரு அடக்கஸ்தலம் உலகின் வேறு எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை.
அடக்கம் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் மையவாடிக்கு விஜயம் செய்யவும் தமது உறவுகளுக்காக பிரார்த்திக்கவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.- Vidivelli
Post a Comment