Header Ads



16 தங்கப் பதக்கங்கள் வென்று புஷ்ரா மதீன் சாதனை - கல்விக்கு ஹிஜாப் தடையே அல்ல என்பது மீண்டும் நிரூபணம்


கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை (Raichur) சேர்ந்த 22 வயது புஷ்ரா மதீன் என்ற விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப (VT) பல்கலைகழகத்தைச் சேர்ந்த SLN கல்லூரி மாணவி 16 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த மார்ச் 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு 13 தங்க பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் ஸ்ரீ SG பாலேகுந்திரி தங்கப் பதக்கம், JNU பல்கலைக்கழக தங்கப் பதக்கம், VTU தங்கப் பதக்கம், RN ஷெட்டி தங்கப் பதக்கம் உள்ளிட்ட 16 தங்கப் பதக்கங்களை தனது திறமையின் மூலம் பெற்றுள்ளார். அது தவிர இரண்டு ரொக்கப் பரிசுகளையும் அவர் வென்றுள்ளார்.

"என் தந்தை ஒரு சிவில் இன்ஜினியர், அதே போல் என் மூத்த சகோதரனும் ஒரு சிவில் இன்ஜினியர். அவர்களிடமிருந்து நான் உத்வேகத்தைப் பெற்றேன்.  எனது தெரிவுகளுக்கு எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர், படிப்பை மேற்கொள்வது முதல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது வரை, அவர்கள் எனது விருப்பங்களுக்கும் ஆர்வத்திற்கும் உடன்பட்டனர்.  நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார், ஆனால் நான் சிவில் இன்ஜினியரிங் பற்றி சொன்னபோது அவரும் அதற்கு இணையாக ஆதரவளித்தார்.  இது ஒரு பெண்ணின் திறன்களை சவால் செய்யக்கூடிய வகையில், வேலைத் தளங்களைப் பார்வையிடுவது, பிரயோக நடவடிக்கைகள் மற்றும் மனித உழைப்பு வேலைகளை உள்ளடக்கியது, ஆனால் நான் எப்போதும் என் வலிமையை நம்பினேன். இந்த துறையானது தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதோடு, அரசாங்க தொழில்வாய்ப்புகளும் இதில் நிறைய உள்ளன. மேலும் UPSCக்கு இப்போதே தயாராவதே எனது இலக்காகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளார் புஷ்ரா.

"நான் எப்போதும் பாடப்புத்தகங்களில் ஆர்வமாக இருக்கிறேன், ஏனெனில் அது எனது அறிவை அதிகரிக்கிறது என்பதுடன் போட்டி சூழலுக்கு என்னை தயார்படுத்துகிறது.  நான் இறைவனை அதிகளவில் நம்புபவள். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்ப்பதில்லை. தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று நான் நம்புகிறேன்,” என்று கூறிய புஷ்ரா, பட்டப்படிப்பு முழுவதும் தன்னை வழிநடத்திய SLN பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.