Header Ads



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாளை, கலாபூஷணம் N.M. நூர்தீன் குறித்த நினைவலைகள்


இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாளை (2022.02.15) செவ்வாய்க்கிழமை இரவு 8.15 அளவில் இடம்பெறவிருக்கும் முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பு நல்கிய மூத்த கலைஞர்களை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வழிவகுக்கும் " பாரம்பரியம்" நிகழ்ச்சியில் 'மூஷிக்நூரி' இசைக்கோ - கலாபூஷணம் கலாநிதி அல்ஹாஜ் N.M. நூர்தீன் அவர்கள் குறித்த நினைவலைகளை நேயர்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அவர்களது புதல்வர் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், 'காவ்யாபிமானி' கலைவாதி கலீல், கலாபூஷணம் முஹம்மது அலி, முதல்தர மூத்த பாடகர் M.S.ஜவுபர் ஆகியோருடன் கவிவாழ்த்தும் வழங்கும் யாழ் அஸீம் ஆகிய அனைவரும்! 

நிகழ்ச்சியை கலாபூஷணம் MSM ஜின்னா தொகுத்தளிக்க, தயாரித்து வழங்குகிறார் முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்பாளர் சகோதரி MJ பாத்திமா ரினூஸியா அவர்கள்!

1938.04.28 அன்று பிறந்த 'இசைக்கோ' நூர்தீன் அவர்கள் AMA அஸீஸ் அவர்கள் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி அதிபராக இருந்த காலத்தில் அங்கு பயின்றவர்! அவரது வகுப்பறைத் தோழராக அமைந்தவர் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சராக இருந்த மர்ஹூம் அஸ்வர் அவர்கள்! இலங்கை வானொலி Colombo Radio என்றும் Radio Ceylon என்றும் அழைக்கப்பட்ட 1948 காலப்பகுதியில் இருந்தே பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற ஆரம்பித்த அவர் பிற்காலத்தில் தமிழ், சிங்கள இஸ்லாமிய கீதங்கள், தமிழ் மெல்லிசை/ பொப்பிசை என ஏராளமாகப் பாடி இசையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்!

பாடலாசிரியராகவும் பேர் பெற்றவர்! பல்வேறு இந்திய பாடக, பாடகிகளோடு இணைந்து கச்சேரி செய்துள்ள அவர் மலேசியாவில் தொலைக்காட்சியிலும்  பாடியவர்! பல இசைத்தட்டுகளையும் வெளியிட்டவர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் அர்ப்பணிப்புடன்  இணைந்து பணியாற்றிய அவர் தமது வர்த்தக நிறுவனங்கள் மூலம் உழைத்ததைக் கூட கலைப்பணிகளை வளர்க்க செலவிட்டவர்! சமுக சேவை ஆர்வலர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக 2005, 2007 ஆண்டுகளிலும் அதன் பின்னரும் 75க்கு மேற்பட்ட  பல்துறைக் கலைஞர்களுக்கும் பட்டமளித்துப், பொன்னாடை போர்த்தி வாழும் போதே வாழ்த்தி மகிழ்ந்தவர்! 

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சிறிது காலம் இசைத்துறையில் பகுதி நேர சிறப்புத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் இலை மறை காயாக இருந்த திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர நாட்டின்  பல இடங்களிலும் இசைப் பரிசோதனைகள் நடத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டார்!

இன்று அவர்  நம்மிடையே இல்லாத போதும்,  அவரை நன்றியுடன் நினைவுகூர்வோர்  ஏராளம்!

மேலதிக தகவல்களை நாளை 15ஆம் திகதி இரவு 8.15க்கு பாரம்பரியம் கேட்டு அறிந்து கொள்ளலாம்!

தொகுப்பு:-

பர்ஸான் இப்னு ஹனீபா

14-02-2022

No comments

Powered by Blogger.