Header Ads



மீண்டும் தண்டிக்கப்படும் ஆசிரியை பஹ்மிதா - எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்கள் - இம்ரான் Mp கண்டனம்


இனங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் ஏற்படும் போது கல்வி அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையாகச் செயற்பட வேண்டும். மாறாக அவர்கள் பிரச்சினையைத் தூண்டுபவர்களாக இருக்கக் கூடாது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து சென்ற ஆசிரியையை கடமையேற்க விடாது தடுத்த சம்பவம் இன்று நாடாளாவிய ரீதியில் பேசு பொருளாக உள்ளது. இதனால் தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஒரு அரச பாடசாலையில் கல்வி உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய கடமையேற்க சென்ற ஆசிரியயை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்தியமை சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். இது குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 

இந்நிலையில் இந்தப் பிரச்சினையைத் தணிக்க வேண்டிய மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது. 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியையை உடடியாக வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைக்கும் கடிதத்தை வலயக் கல்விப் பணிப்பாளரும், மாகாணக் கல்விப் பணிப்பாளரும் வழங்கியுள்ளனர்.

ஒரு ஆசிரியையை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைப்பதன் நோக்கம் என்ன? அதற்கான நிர்வாக ஏற்பாடுகள் ஏதும் உண்டா?  அவருக்கு என்ன கடமையை அங்கு வழங்க முடியும்.

வலயக் கல்வி அலுவலகத்தில் அவருக்கான கடமை இல்லை என்றால் அவர் காலை முதல் மாலை 4.15 வரை அலுவலகத்தில் என்ன செய்ய முடியும்? என்று யோசித்தல்லவா முடிவெடுக்க வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

தற்போது நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் விடுமுறை. இதனால் ஆசிரியர்களுக்கும் விடுமுறை. ஆனால் இந்த ஆசிரியையை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைத்து தினமும் அலுவலகத்திற்கு வர வைப்பது அவரைத் தண்டிப்பது போன்ற செயலாகும். இது தற்போதைய பிரச்சினையைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் தூண்டி விடும் செயலாகும். 

இது குறித்து எனது ஆட்சேபனையைத் தெரிவிக்க மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் பல தடவை தொடர்பு கொண்ட போதும் அவர் எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் தரவில்லை. 

வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு எனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளதோடு உடனடியாக ஆசிரியையின் விருப்பத்துடன் பாடசாலை ஒன்றுக்கு அவரை இணைப்புச் செய்யுமாறு அறிவித்துள்ளேன். இதனைக் கவனத்தில் எடுப்பதாக எனக்கு அவர் அறிவித்துள்ளார்.

என்னைப் போன்ற சில அரசியல்வாதிகள் சமுக ஒற்றுமை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்வி அதிகாரிகள் நடுநிலையாகச் சிநத்தித்து செயற்பட வேண்டும். பிரச்சினையைப் பூதாகரமாக்கும் செயற்பாடுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Are they accept the same practice with Tamil teachers in Muslim schools?

    ReplyDelete

Powered by Blogger.