Header Ads



அநுரகுமாரவைப் படுகொலை செய்யச் சதி - விஜித ஹேரத் Mp குற்றச்சாட்டு


ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவைப் படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதென்பதையே முட்டை வீச்சு தாக்குதல் சம்பவமும் எடுத்துக்காட்டுகின்றது.

அதனால்தான் அவர் செல்லும் இடங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவைக் கொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலை அழிப்பதற்குமான தேவை மேற்படி எதிராளிகள் குழுவுக்கு உள்ளது. இந்தத் தகவலை பொறுப்புடன்தான் நான் கூறுகின்றேன்.

இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு எம்மால் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைளையும் நாம் மேற்கொள்வோம். அநுரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டாம் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றோம்.

சிலவேளை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இந்தக் குண்டர்கள் குழுவைப் பயன்படுத்திய அரசியல் அதிகாரத் தரப்பு பொறுப்புக்கூற வேண்டும்.

இன்று முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள், நாளை வேறு நடவடிக்கையில் இறங்கலாம். எனவேதான், அநுரவைப் பாதுகாக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். எம்முடன் இவ்வாறு மோத வேண்டாம்.

மோதுவதாக இருந்தால் அரசியல் கொள்கை அடிப்படையில் மோதவும். அதேபோல் முட்டை வீச்சு தாக்குதலால் எமது அரசியல் பயணத்தை நிறுத்தவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.