Header Ads



எல்லா இடங்களிலும் என்னை முஸ்லிங்கள் இன ஐக்கியத்துடனும், நல்ல பண்புகளுடனும் வரவேற்றார்கள் - உதவிக்கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்.


என்னுடைய சேவைக்காலங்களில் நான் முஸ்லிம் பிரதேசங்கள் சேவையாற்றியுள்ளேன். கிண்ணியாவில் கடமையாற்றிய பின்னரே நான் கல்முனைக்கு மாற்றலாகி வந்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் என்னை முஸ்லிங்கள் இன ஐக்கியத்துடனும், நல்ல பண்புகளுடனும் வரவேற்றார்கள். அண்மையில் பேசுபொருளாக மாறியிருக்கும் சிறுபான்மை மக்களிடையிலான இன முறுகல் தேவையற்ற ஒன்றாக பார்க்கிறேன். நான் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் எனது சிறுபராயத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலையே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம் எங்களுக்கு அங்குள்ள ஹாஜியார் தாகசாந்திகளை வாங்கித்தருவார். இப்போது அவ்வகையான வாய்ப்புக்கள் இல்லை என கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் சஞ்சீவன் தெரிவித்தார்.

74வது சுதந்திர தின நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரின் தலைமையில் மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில்  நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய உதவிக்கல்வி பணிப்பாளர் சஞ்சீவன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்போது நடக்கும் ஒருசில சம்பவங்கள் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இவ்வாறான கசப்பான எண்ணங்கள் மாணவர்கள் மத்தியில் இருக்கக்கூடாது என்றார். 

மேலும், சுதந்திர தின நிகழ்வுகள் நன்கு திட்டமிடப்பட்டு மாணவர்கள் மத்தியில் நடத்துவது சிறப்பான மற்றும் பயனுள்ளதாக அமையும். இதன்மூலம் தேசப்பற்று உருவாகும். நாட்டின் வளங்களை எவ்வாறு பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவது என்று நாட்டின் தலைவர்கள் ஊடகங்களில் அறிவித்தல் விடுத்துள்ளார்கள். இந்த பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம் தேவை எனும் செய்தியை மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தேசிய தவிசாளர் நூருல் ஹுதா உமர் வலியுறுத்தியிருந்தார். அந்நியசெலவாணி பற்றாக்குறையினால் எமது நாடு கடுமையான திண்டாட்டத்தை சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் வாசித்து தெரிந்து கொண்டேன். 

இலங்கைக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் பெரிய செல்வாக்கு செலுத்துபவர்கள் பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்பவர்களும், மலையக தோட்டத்தொழிலாளர்களாக இருக்கும் பெண்களுமே. அவர்களை கொண்டு அந்நியசெலவாணியை பெற்றுக்கொள்ளும் நாங்கள் எமது அண்டை நாடான இந்தியாவில் 2021 இல் 35 பில்லியன் அமெரிக்க டொலரும், சவூதி அரேபியாவின் வருமானம் 28 பில்லியன் அமெரிக்க டொலரும் கணனி மென்பொருள்களை ஏற்றுமதி செய்வதை மட்டும் கொண்டே பெற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் யாரை கொண்டு அந்நிய செலவாணிகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை பற்றி கவனம் செலுத்த வேண்டும். 

அந்நியசெலவாணிகளை ஈட்டும் சந்ததியாக எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும் என்று அண்மையில் தலைநகரில் நடந்த கூட்டத்தில் அமைச்சரும் எங்களிடம் வலியுறுத்தினார். அந்த நிலை வந்தால் தான் எதிர்காலத்தில் எமது நாடு ஏனைய நாடுகளுடன் ஈடுகொடுக்கும் சக்தியை பெரும். இதற்கு சிறந்த உதாரணமாக மலேசியாவை நாம் காணலாம்- என்றார்.

No comments

Powered by Blogger.