தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சட்டபீடமும், வைத்தியபீடமும் காலத்தின் தேவையாக உள்ளது - நீதியரசர் திலீப் நவாஸ்
- பாறுக் ஷிஹான் -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் சட்டபீடத்தை நிறுவி அந்த சட்டபீடத்தில் தான் விரிவுரையாளராக கடமையாற்ற வேண்டும் எனும் கனவை தன்னுள் வைத்திருந்தார்.
நானும் அவரும் சட்டபீட மாணவர்களாக இருந்தபோது நானும் அவரும் சட்டபீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்ற வேண்டும் எனும் கனவை மறைந்த அஸ்ரப் தன்னுள் வைத்திருந்தார். அவரது கனவை நிஜமாக்கும் பொறுப்பு இன்றைய பல்கலைக்கழக சமூகத்திற்கு இருக்கிறது என உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் தலைமையில் கலைப்பீட மாணவர்களுக்கு பட்டமளிக்கும் நிகழ்வாக இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக 14வது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை(8) பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்
தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்றால் மறைந்த அஸ்ரப் எல்லோருக்கும் நினைவில் வருவார். அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று சட்டபீட மாணவர்களுக்கு தன்னுடைய சட்டம் சார்ந்த அறிவை வழங்க வேண்டும் எனும் அவா இருந்தது. அவரது கனவுகள் மிக தூரநோக்கு கொண்டதாக அமைந்திருந்தது.
இந்த பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் மட்டுமின்றி வைத்தியபீடமும் காலத்தின் தேவையாக உள்ளது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இணைத்துக்கொண்டு மருத்துவ பீடத்தை உருவாக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். எதிர்காலம் ஆங்கிலத்தை மையமாக கொண்டுள்ளதால் எதிர்கால உயர்கல்வி பாடத்திட்டங்கள் ஆங்கில மொழிமூலமே அமையவேண்டும்.
இதனை மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகள் இந்த கொள்கையை வெகுவாக பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். நாம் எதிர்கால சந்ததியினரை கருத்தில்கொண்டு எமது திட்டங்களில் பாரிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் எஸ். தில்லைநாதனுக்கு இலக்கிய பணியை பாராட்டி கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கலைப்பீடத்தை சேர்ந்த 567 மாணவர்களுக்கு இன்றைய அமர்வின் போது பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் 04 மாணவர்கள் முதுகலைமானி பட்டம் வழங்கி வைக்கப்பட்டத்துடன் 2013/14 கல்வியாண்டின் சிறந்த மாணவிக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருது அப்துல் வஹாப் பாத்திமா பினாஸிர்க்கும் அதே கல்வியாண்டில் பேராசிரியர் கைலாசபதி விருது செய்யாது இப்ராஹிம் பாத்திமா பஹ்மியாவுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
2014/15 கல்வியாண்டின் சிறந்த மாணவிக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருது எஸ்.வை.யூ.பாத்திமா றுமானா மௌலானா வுக்கும் அதே கல்வியாண்டில் பேராசிரியர் கைலாசபதி விருது எம்.எஸ். சுமய்யாவுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment