Header Ads



முடிந்தால் அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு எதிர்க்கட்சிக்கு சவால் விடுகிறேன் - பிரதமர்


சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை சிந்தித்து ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்க நேரிட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறித்து சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

இரசாயன உரத்தை தடை செய்தோம். மக்களின் ஆரோக்கியதற்காக இந்த கடுமையான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார். நாங்கள் எடுத்து அனைத்து விடயங்களிலும் எங்களுக்கு எதிராக பல தரப்பினர் செயற்பட்டனர்.

சீனாவின் தடுப்பூசிக்கும் தவறான கருத்துக்களை வெளியிட்டார்கள். உலகின் சிறந்த தடுப்பூசி என கூறப்படும் பைசருக்கும் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள்.

இந்த நாட்டு விவசாயிகளின் பிரச்சினை என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஏன் என்றால் நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வந்தோம்.

நாங்களே நெல்லுக்கு அதிக கட்டணத்தை செலுத்தினோம். விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்ட காலங்களும் இருந்தது. எனினும் நாங்கள் அதனையும் மாற்றியமைத்தோம்.

அடுத்த தேர்தல்கள் குறித்து செயற்பட்டிருந்தால் போரையேனும் வெற்றிக் கொண்டிருக்க முடியாது. இறக்குமதியை தடை செய்தோம். அதனால் எவ்வளவு பெரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எங்களுக்கு தெரியும்.

எனினும் நாங்கள் நாட்டிற்காகவே அனைத்தையும் செய்தோம். இன்று முதல் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை உங்களிடம் எடுத்து வருகின்றோம்.

முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுகிறேன்.

”கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டாமென எதிர்க்கட்சி கோரியது.

சீனாவின் தடுப்பூசி பலவீனமானது என தெரிவித்தனர். நாங்கள் மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை முன்னெடுத்தபோது அவர்கள் இந்த விளையாட்டை விளையாடினார்கள். விவசாயிகளின் பரம எதிரி அரசாங்கமே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு இந்த நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஐயாயிரம் நிவாரணத்தை வழங்கினோம்.

ஆசிரியர்களை வீதிக்கு இறக்கி, அரச ஊழியர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பியது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அரசாங்கத்தின் அனைத்து செயற்றிட்டங்களையும் குழப்ப இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எங்களுக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் எமக்கும் அனுபவம் உள்ளது. தேவையெனின் மக்களுக்கு இடையில் நாமும் செல்வோம். முன்னைய ஆட்சியினர், அரச ஊழியர்கள், பௌத்த தேரர்கள், இராணுவ உறுப்பினர்களை சிறையில் அடைத்தார்கள்.

இராணுவத்திற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு யோசனைகளுக்கு அனுசரணை வழங்கினார்கள். தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தினார்கள்.

நாங்கள் நாட்டை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளோம். முடியுமானால் சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து செயற்பட்டு வெற்றிபெறுமாறு நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு சவால் விடுக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.