Header Ads



அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்


நாட்டில் அந்நியச் செலாவணிக்கு (Forex Reserve) நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு விநியோகிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, முதல் தடவையாக நிதி அமைச்சில் இன்று கூடியது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்களை எவ்வித தட்டுப்பாடும் இன்றி மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

பால் மா, எரிவாயு, கோதுமை மற்றும் சீமெந்திற்கு ஓரளவு தட்டுப்பாடு காணப்பட்டாலும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போதுமானளவு இருப்பதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், நுகர்வோருக்கு உரிய முறையில் கிடைக்காமை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில வர்த்தகர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமையும் கூட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை வௌிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.