Header Ads



எனக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள், பாராளுமன்றத்தில் உள்ள பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள்


பாராளுமன்றத்திற்குள் டோர்ச்லைட் கொண்டுவந்த விவகாரம் தொடர்பில் தமக்கு எதிராக எத்தகைய விசாரணையை முன்னெடுத்தாலும் பரவாயில்லை என்றும், எனினும் பாராளுமன்றத்தில் கடமையில் உள்ள பொலிஸார் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.ஹரீன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

தாம், எத்தகைய பார்சலையும் சபைக்குள் கொண்டுவரவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட சிறு விளையாட்டு டோர்ச் ஒன்றை மட்டுமே கொண்டு வந்ததாகவும் தெரிவித்து அதனை சபையில் கழற்றியும் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று காலை ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணை நடைபெற்ற வேளையில், தமக்கான அனுதாபப் பிரேரணை உரையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

டோர்ச் லைட்டைக் கொண்டு வந்ததன் மூலம் நான் உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்பட்டதாகவும், எனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சபையில் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுத்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

எனினும், கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

நான், வழமையாக சபைக்கு கொண்டுவரும் எனது சிறிய பேக்கையே அன்றும் கொண்டு வந்தேன். அதில் எனது அந்த சிறிய டோர்ச்சும் இருந்தது.

நான், அதனை ஸ்கேன் இயந்திரத்தில் பரிசோதித்த பின்னரே சபைக்குள் எடுத்து வந்தேன். அந்தவகையில், என்னைப் பரிசோதித்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிகிறேன். அவ்வாறு செய்ய வேண்டாம்.

அதேபோன்று நான் அடுத்த வாரம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கான சில செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளேன். அதன்போதும் எனக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என, கேட்டுக்கொள்வதாகவும் அவர் நேற்று சபையில் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments

Powered by Blogger.