Header Ads



நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரேன், ரஷ்யாவுக்கு எதிராக கொதிப்பது வேடிக்கையானதா..? சகல யுத்தங்களையும் கண்டிப்போம்


- Naushad Mohideen -

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள மூர்க்கத்தனமான மனிதாபிமானமற்ற தாக்குதலை நிறுத்துமாறு கோரும் எந்தவிதமான தார்மீக உரிமையும் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ அல்லது நேட்டோ அமைப்புக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ கிடையாது.

உக்ரேன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா ஆயிரம் நியாயங்களை முன்வைத்தாலும், தனது கட்டுப்பாட்டில் இருந்து அல்லது செல்வாக்கில் இருந்து பல்வேறு வகையான வளங்கள் மிக்க உக்ரேன் விலகிச் சென்று நேட்டோ அணியுடன் சேர்ந்து விடக் கூடாது என்பது தான் தாக்குதலுக்கான ஒரேயொரு காரணமாகும்.

ஒன்றில் உக்ரேன் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அங்குள்ள ஆட்சி பீடம் தான் சொல்வதெற்கெல்லாம் தலையாட்ட வேண்டும், தனக்கு அடிமையாக இருக்க வேண்டும். இல்லையேல் அந்த நாடும் அதன் வளங்களும் நாட்டு மக்களும் இருந்தாலும் சரி அழிந்தாலும் சரி அதைப்பற்றி தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது தான் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் சித்தாந்தம்.

இதே சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் உதுமானிய பேரரசில் தொடங்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக கூறு போட்டு விட்டு அதன் பிறகும் அந்தப் பிராந்தியத்தினது வளம் மிக்க பலஸ்தீனம், ஈராக், ஈரான், சிரியா, யெமன் மற்றும் சூடான, எதியோப்பியா, எகிப்து, லிபியா என வரிசையாக பல நாடுகளை பல்வேறு காலகட்டங்களில் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு இலட்சக்கணக்கான மக்களை இன்றும் கூட அகதிகளாக அவலவாழ்வு வாழும் நிலைக்குத் தள்ளியவர்கள் தான் அமெரிக்கவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் தலைவர்கள்.

காலத்துக்கு காலம் தமது சொந்த தேவைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும், தங்களால் மத்திய கிழக்கில் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் நலனைப் பாதுகாக்கவும், தமது நாடுகளின் பல்தேசியக் கம்பனிகளின் நலனுக்காகவும், தமது பழைய ஆயுதங்களின் கையிருப்புக்களை குறைத்துக் கொள்ளவும், புதிய ஆயுதங்களின் உற்பத்தியை உலகுக்கு அறிமுகம் செய்யவும், அந்த ஆயதங்களுக்கான சந்தை வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளவும் அமெரிக்க ஐரோப்பிய தலைவர்கள் அப்பாவி நாடுகள் மீதும் அந்த நாட்டு மக்கள் மீதும் கட்டவிழத்துவிட்ட அநியாயங்கள், அட்டூழியங்கள் மற்றும் அடாவடித்தனங்களோடு ஒப்பிடுகையில் தற்போது ரஷ்யா உக்ரேனில் செய்து கொண்டிருப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. 

இந்த அநியாயங்கள் நாம் வாழும் யுகத்தில் நம் கண்னெதிரே நடந்தவை. அப்போதெல்லாம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஜால்ரா வாசித்த ஐக்கிய நாடுகள் சபை இப்போது மட்டும் ரஷ்யாவுக்கு எதிராக கொதிப்பது வேடிக்கையானது.

ஐக்கிய நாடுகள் சபை என்பது சாதாரண ஏழை நாடுகளுக்கும் வலுவற்ற நாடுகளுக்கும் எதிராக மட்டும் தான் செயற்பட முடியும். அதன் கட்டமைப்பு அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையில் பலம் மிக்க நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கின்ற வரைக்கும் அங்கே எவரும் எந்த விதமான நியாயத்தையும் கோரி நிற்க முடியாது. உக்ரேன் விடயத்திலும் அதுதான் நடந்துள்ளது. ரஷ்யா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் உள்ள வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு. தனக்கு எதிரான தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்தே அது வலுவிழக்கச் செய்துள்ளது. இனி யாரிடம் போய் நீதி கேற்பது என்ற நிலைக்கு யுக்ரேன் தள்ளப்பட்டுள்ளது.

உக்ரேன் ஜனாதிபதி அரசியல் முன் அனுபவம் அற்ற அந்த நாட்டின் முன்னாள் நகைச்சுவை நடிகர். அவர் நேட்டோவை நம்பியது தான் அவர் செய்த மாபெரும் முட்டாள் தனம். இதை அவர் தற்போது உணர்ந்து நேட்டோவை சாடுகின்றார். ஆனால் அது காலம் கடந்து பிறந்துள்ள ஞானம்.

இனி அவரும் அவரது மக்களும் நேரடியாகப் போராடித் தான் ரஷ்யாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். ஆரம்ப கட்டத் தகவல்களின் படி ரஷ்யாவால் திட்டமிட்டபடி முன்னேற முடியாமல் போயுள்ளது. உக்ரேன் பொது மக்கள் வீதிகளில் இறங்கி தம்மை நோக்கி வரும் இராட்சத ரஷ்ய படை அணிகளையும் கவச வாகனங்களையும் எதிர்த்து நிற்பார்கள் என்பது ரஷ்யா முற்றிலும் எதிர்ப்பார்க்காத விடயம். உக்ரேன் தலைநகர் கீவ்வுக்குள் ஊடுறுவிய ரஷ்ய படைகள் அங்கே தடுமாறி நிற்பதாகத் தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்ல இன்றைய யுத்தங்களின் பிரதான அம்சமாகத் திகழும் டிஜிட்டல் பிரிவு அல்லது சைபர் யுத்தத்தில் ரஷ்யா முற்றிலும் எதிர்ப்பாராத விளைவுகளை சந்தித்துள்ளது. உக்ரேன் இளைஞர்களை உள்ளடக்கிய திறமையான ஒரு ஹெக்கர்ஸ் பிரிவு (Hackers Unit) சுயமாகக் களம் இறங்கி ரஷ்ய தரப்புக்கு எதிர்பாராத பல பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ரஷ்ய பாதுகாப்பு பிரிவு முற்றிலும் எதிர்பாராத, அவர்களின் திட்டமிடலின் கீழ் வராத இந்த சைபர் தாக்குதலால் அங்கு தகவல் பரிமாற்றம் உற்பட பல விடயங்களில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நேட்டோவையும் நம்பி ஏமாந்த ஒரு தலைவருக்காவும் அவரது மக்களுக்காகவும் அனுதாபத்தை நாம் தெரிவித்துக் கொள்வோம். அதேவேளை நீங்கள் உங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள். உங்களை நாங்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே கொண்டு வருகின்றோம் என்று அவர்கள் கொடுத்த உத்தரவாதத்தை தூக்கி எறிந்து விட்டு இராணுவ உடை தரித்து தனது மக்களோடு மக்களாக இராணுவத்தோடு இணைந்து போர்க் களம் புகுந்துள்ள உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டவும் வேண்டும்.

எந்தவொரு பிரச்சினைக்கும் யுத்தம் ஒரு தீர்வல்ல. யுத்தத்தால் ஏற்படுவது மரணமும், அழிவும், நாசமும், அவலமும், ஓலமும் மட்டுமே.

இராணுவ ரீதியான தனது புஜ பலத்தை காட்டி ஒரு தேசத்தையோ அதன் மக்களையோ அல்லது ஒரு இனத்தையோ அடக்கி ஒடுக்க முயல்வதும் அழிக்க முயல்வதும், அல்லது ஒரு தேசத்தின் வரலாற்றையோ அல்லது ஒரு இனத்தின் வரலாற்றையோ இராணுவ பலம் கொண்டு மாற்றி அமைக்க அல்லது அதன் தடயங்களை மறைக்கவும் அழிக்கவும் முயல்வதும் சீரான சிந்தனையும் விவேகமும் உள்ள தலைவர்களின் செயலாக ஒரு போதும் இருக்க முடியாது. அத்தகைய செயல்கள் மடத்தனத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

உலகின் எந்தப் பாகத்தில் அவை இடம் பெற்றாலும் எந்த விதமான பாரபட்சமும் பாகுபாடும் இன்றி உலக மக்களால் அவை கண்டிக்கப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது என நம்புகிறேன்.

உக்ரேன் விடயம் முழு உலகையும் பாதிக்கும் ஒரு விடயம். விரைவில் அங்கு சமாதானம் மலர பிரார்த்திப்போம். (27.02.2022)

No comments

Powered by Blogger.