Header Ads



ஆசிரியை பஃமிதா றணீஸ் , அடிப்படை உரிமைக்காக விட்டுக் கொடுக்காது போராடுங்கள்


உங்கள் நிலைப்பாடு உங்களை மட்டும் காப்பது அல்ல,இப்படியாக பாதிக்கப்படும் அனைத்து, இன , சமூகங்களுக்கும் , மக்களுக்கும் உரியன! 

சண்முகா வித்தியாலய மாணவிகள், பஃமிதா றணீஸ் அணிந்துவரும் ஆடைக்கு எதிராக போராடீனார்கள் 

என்று சொல்வது உண்மையானால் ,இலங்கையின் எதிர்கால சந்ததிகள் வளர்க்கப்படும் சூழல் குறித்து , நாம் மிக ஆழமாக கரிசனை செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம் !

------------------------------------------------

எமது இந்த நிலைப்பாடு பஃமிதா றணீஸ் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல,அவர் ஒரு முஸ்லிம் ஆசிரியை என்பதற்குமானதல்ல.  இந்த வகையான அத்துமீறல்கள்,   அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, மற்றவர்களின் அடையாளங்களை மதிக்கத் தெரியாத , இனவாத , மேலாதிக்க நடைமுறைகள் எங்கு நிகழ்ந்தாலும் , எத்தரப்பில் நடந்தாலும் எமது நிலைப்பாடு  இதுவேதான் !

*இலங்கை அரசியலமைப்பில் உள்ள  ஒரு உரிமை

*மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள உரிமை

*நீதிமன்றத்தில் இணக்கம் காணப்பட்ட ஒரு விடயம் 

*இலங்கை ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையும் இடாத விடயம் .

*கல்வி அமைச்சே , அபாயா அணிந்து, கடமைக்கு செல்லலாம் என பணிக்கு மீள அழைத்த  அழைப்பு 

இவ்வளவு அம்சங்களும் இந்த விடயத்தில் தெளிவாக உள்ள போது  , திருமலை சண்முகா பாடசாலை நிர்வாகமும், அங்குள்ள சிலரும் காட்டும்  எதிர்ப்புக்காக , ஆசிரியை  பஃமிதா றணீஸ் தனது உரிமைய விட்டுக் கொடுக்க முடியாது! 

சகோதரி/ தோழி பஃமிதா றணீஸ் நீங்கள் , உங்கள் மீது எந்த அராஜாகம் இழைக்கப்பட்டாலும் , அதனை உறுதியுடன் எதிர் கொண்டு மிகத் துணிச்சலாக முன் செல்லுங்கள்!   நாம் ஏலவே சொன்னது போல் இது உங்களது தனிப்பட்ட விடயம் மாத்திரமல்ல. மேலாதிக்கங்களுக்கு எதிராக , ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தபட்ட விட்டுக் கொடுக்க முடியாத ஒரு முக்கியமான விடயம் இது! 

சொந்த மக்களை பாதுகாத்து, அவர்களது  அரசியல் உரிமைகளுக்காக குரல் தருவோம் என மக்களிடம் வாக்குப்பிச்சை எடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களானதன் பின், ஒடுக்குமுறை அரசின் காலில் விழுந்து மண்டியிட்டு , சொந்த மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணையாகவும், அணுசரனையாகவும்  இருக்கும் அரசியல் பிரதிநிதிகள்  மலிந்த ஒரு சமூகத்திற்குள்  இருந்து, மிகத் துணிச்சலாக , கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சகல வழிகளிலும், உறுதியாக போராடி வரும் உங்களுக்கு எமது ஒருமைப்பாடு என்றும் உண்டு!

000

இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஆழமாக கவனக்குவிப்பினை செலுத்த வேண்டிய மற்றுமொரு விடயம், திருமலை சண்முகா வித்தியாலய மாணவிகள் , ஆசிரியை பஃமிதா றணீஸ் அணிந்துவரும் ஆடைக்கு எதிராக போராடீனார்கள்  என  ஒரு சில ஊடகங்கள்  வாயிலாக சொல்லப்படும் பிரச்சாரமாகும். இத்தகைய ஊடகங்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் விதைத்த நச்சுவிதையை இதன் வழியாக தமது விளைச்சலாக காட்டுவதையிட்டு  அந்த ஊடகங்களுக்கு உள்ள பெருமையாக இதனை கொண்டாட முடியும். 

 ஆனால் உண்மையில் சமூகப் பொறுப்புள்ள, எதிர்கால சந்ததிகள் குறித்த அக்கறையும் கரிசனையும் உள்ள யாரும், இது குறித்து ஆழ்ந்த துயரையும், இத்தகைய நச்சு விதைகளை மாணவிகள் மனதில் இருந்து அகற்றுவதற்கான உடனடிப் பொறுப்புகளையும் இட்டே சிந்திக்க தலைப்படுவர். 

மேலும் இந்த  இனவாத ஊடகங்கள் செய்தியை  பிரசுரிக்கும் போது , ஆசிரியை முகத்தை மூடி பாடசாலைக்கு வந்தார் என எழுதுவது மிக மோசமான சித்தரிப்பும் ,செய்தியைப் படிக்கும் மக்களை திசை திருப்ப கையாளும் குய யுக்தியுமாகும். அபாயா என்பது முகத்தினை மூடி அணியும் ஆடை அல்ல,  மிக நெருக்கமாக மதிப்புக்குரிய கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரிகள் அணியும் ஆடைக்கு ஒப்பானதே! 

இந்த இனவாத ஊடகங்கள் உண்மை நிலையை மக்கள் அறிய விடாது திசை திருப்புவதில் சளைக்காது பணி செய்து வருபவைதான்.

இத்தகைய இனவாத ஊடகங்களையும், இந்த விடயத்திற்கு பின் நின்று செயற்படும் இனவாத தரப்பினரையும் தோல்வியடையச் செய்வதன் வழியாகத்தான் சமூகங்களுக்கு இடையில் நியாமான உரையாடல்களுக்கான வாசல்களைத் திறக்க முடியும்! ஒருமைப்பாட்டிற்கும் , உண்மையான சமூக சமத்துவத்திற்குமான அடித்தளத்திற்கும் பலம் சேர்க்க முடியும்! 

0000

இந்த விவகாரம் , திருமலை சண்முகா வித்தியாலயம் தொடர்பான விடயம் மட்டுமல்ல, மிக ஆழமானது. இன, மத சமத்துவத்திற்கும் , சமூக கலாசார அடையாளங்கள் தொடர்பான அரசியல் , சமூக அறிவுடனும் , பரந்துபட்ட கற்றலுடனும் தெளிவான புரிதலுடனும் சம்பந்தப்பட்ட விடயமாகும்! 

இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் இப்படியான விடயங்கள் நிகழும் போது முற்போக்காளர்கள், கல்வியலாளர்கள், மனித உரிமையாளர்கள், சமூக பங்களிப்பாளர்களின் உறுதியான நிலைப்பாடும் , இந்த மாதிரியான பாசிசத் தன்மை நிறைந்த , ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துகின்ற , பல்கலாசார அடையாளங்களை மறுக்கின்ற இதன் பின்னுள்ள அரசியல் , இன, மத மேலாதிக்கம் குறித்தும் புரிதலும்  இந்த நூற்றாண்டில் மிக முக்கியமான சிந்தனைகளுக்கும், நிலைபாடுகளுக்குமான  ஆழமான அடிப்படைகளாவும் இருந்துள்ளன.  ஆகவே, இந்த விடயத்தில் இக்காலகட்டத்தில் சமூகத் தளங்களில்  இயக்கத்தில் உள்ள அமைப்புகளினதும், தனிமனிதர்களதும் கருத்து  நிலைப்பாடும் ,  தலையீடும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். 

ஆசிரியை  பஃமிதா றணீஸ் , நீங்கள் மிகத் தவறான முன்னுதாரமான பெண் இல்லை,தமக்கு  உரித்தான உரிமைகளை விட்டுக் கொடுக்காது , சமூக உரிமைகளுக்காக இறுதி வரை போராடும், போராடிய பெண் என வரலாற்றில் பதியப்படுவீர்கள் ! இந்த விடயத்தில் சகோதரி பஃமிதா றணீஸ் அவர்கள்  மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு இன, மதம் கடந்து அனைத்து சமூக ஜனநாயக சக்திகளும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற அனைவரும் ஆதரவினையும், தமது ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பது மிக முக்கிய கடமையாகும்! 

000

எம். பௌசர் 

ஒருங்கிணப்பாளர்- இலண்டன்

இனவாதத்திற்கு எதிரானதும்,

 ஜனநாயகத்திற்குமான  மக்கள் அமைப்பு 

People’s Movement Against Racism and for Democracy

03- பெப்ரவரி 2022

2 comments:

  1. Furkanhaj says:சிந்தனை தெளிவுள்ள தரமான அறிக்கை.

    ReplyDelete
  2. தெளிவான உண்மை

    ReplyDelete

Powered by Blogger.