Header Ads



அரசாங்கம் இஸ்லாமியக் கல்வியில் தலையிடுகிறது - ஹக்கீம் கடும் விசனம்


அரசாங்கம்  சிலரைக் கொண்டு ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டு,இஸ்லாமிய சமயக்கல்வி விவகாரத்தில் இப்பொழுது  தலையிட்டுவருவதாகஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  ஞாயிற்றுக்கிழமை (30)ஓட்டமாவடியில் நடைபெற்ற முன்பள்ளி பாடசாலை யொன்றின் ஏழாம் ஆண்டு நிறைவு கலை நிகழ்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது விசனம் தெரிவித்தார்.

மீராவோடை, பத்ரியாநகர்,அல்-மினா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற எக்ஸிம் முன்பள்ளியின் பிரஸ்தாப நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,

 நடந்த புலமை பரிசில் பரீட்சை பற்றி இங்கு வந்திருக்கின்ற அதிபரோடு கதைத்துக் கொண்டிருந்தேன்.நாட்டில் பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். இதன் பின்னணி என்னவெனப் பார்த்தபோது பரீட்சை வினாத்தாள் சற்று கால தாமதமாக வழங்கிவிட்டு முழுமையாக விடைகளை எழுதி முடிப்பதற்குள் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் விடைத்தாள்கள் பெறப்பட்டதாக புகார் செய்யப்படுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, வேறேதும் பிரச்சினைகள் இருக்கின்றனவா எனக் கேட்ட போது அவர் முதலாம் பகுதி வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், கேள்விகள் சில கிட்டத்தட்ட 10வரிகள் வரையில் கேட்கப்பட்டு இருந்ததாகவும் வினாக்களை வாசித்து விளங்கிக் கொள்வதற்கு நேரம் எடுத்ததாகவும் கூறினார்.

வினாத்தாள்களை தயாரிக்கின்ற போது உளவியல் ரீதியான பார்வையும், தெளிவும் இல்லாமையினாலேயே இவ்வாறான குளறுபடிகள் ஏற்படுகின்றன. வேண்டுமென்றால் வெட்டுபுள்ளியைக் குறைத்துக் கொடுப்பார்கள்.

ஆனாலும், பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகின்ற மன அழுத்தம் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

பாட விதானங்களை தயாரிக்கின்ற போது இருக்கவேண்டிய விஞ்ஞான ரீதியான அணுகுமுறையைப்   பொறுத்தமட்டில் இவ்வாறான விடயங்கள்  தொடர்பில் தேர்ச்சி இல்லாமையைக் காண்கின்றோம்.


 பாராளுமன்றத்தில் நடக்கின்ற கல்வி அமைச்சு சம்பந்தமான கலந்துரையாடல்களின் போது பாட விதானங்களை தயாரிப்பதில் நிறைய நிபுணர்கள் வந்து விளக்கமளிக்கின்றபோது  சில பாட விதானங்களுடைய குறைபாடுகளையும், அவற்றினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் முன் வைக்கின்றனர்.


இப்போது அரசாங்கம்  சிலரைக் கொண்டு ஆணைக்குழுக்களை நியமித்து ,முஸ்லிம்களின் சமயக்கல்வி விவகாரத்தில் மூக்கை நுழைத்துக்கொண்டு இருக்கின்றது.

 இப்போது நாடு முழுவதிலும் இஸ்லாம் பாட புத்தகங்களை மீளப் பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகபப் பத்திரிகையில்  செய்தி வெளி வந்திருந்ததைக் கண்டேன். இவ் விடயம் தொடர்பில் நான் தேசிய கல்வி நிறுவகத்திலும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்திலும் கடமையாற்றும் சிலருடன் கதைத்தேன்.

ஊர் ஊராக செல்லும் செயலணியின்  "ஞானம்" உள்ள தலைவர் எல்லா இடத்திலும் கூட்டங்களைக் கூட்டி, முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்திற்கு மூல காரணமாக அமைவது இஸ்லாமிய பாட நூல்கள் என அறிவுறுத்துகின்றார்.

இஸ்லாம் பாடம் படிப்பிக்கின்ற போது கலிமாவைக்  கூறக்கூடாது என்கிறார்.

ஏனென்றால், "அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை" என்பது மற்ற மதங்களுடன் பிரச்சினைகளை உருவாக்கும் என அச்சுறுத்துகின்றார். அவர்களது அறிவு மட்டம் அவ்வளவு தான். அதற்கு எங்களில் சிலரும் கூட்டுச் சேர்ந்துக்கொள்கின்றனர். அவரால் முன் வைக்கப்படுகின்ற கருத்துக்கள் சமூகங்களுக்கு  மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவருகின்றன.

தேசிய கல்வி நிறுவகத்தில் 'ஆசிரியர் கையேடு' புத்தகத்தை மாற்றிமைக்க  வேண்டும் எனக்கூறி, ஹிஜ்ரத் சென்றது பற்றியும், மதீனாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சி அமைத்தது பற்றியும் பேசக்கூடாது என்கின்றனர்.

 ஏனென்றால், இந்த விடயம் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியான ஆட்சி வேண்டும் என  கேட்க வழியை ஏற்படுத்திவிடுமாம். என்ன  முட்டாள்தனம்? இவ்வாறான கூட்டத்தை வைத்துக்கொண்டுதான்  ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைத்து இந்நாட்டு முஸ்லிம்களின் விவகாரத்தில் தலையிடுகின்றார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.

 சமூகமே முன்வந்து ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து பிரச்சினைகள் ஏதும் இருப்பின் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் "ரித்தத்" சம்பந்தமாக சில விடயங்களை தீர்க்க வேண்டும் என நினைத்தேன்.  நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அவ்வாறானவற்றை மிகைப்படுத்திக்  காண்பிப்பதற்கு எத்தனிக்கின்றனர்.

 இன்று பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகமே அரசாங்கத்தின்மீது  குற்றம் சுமத்துகின்றது. அதில் இருந்து விடுபடுவதற்காகவே எமது சமூகத்திற்கு மேல் இவற்றைத் திணிக்கின்றனர். இவ்வாறான செயல்களின்  விளைவு இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக எழக்கூடிய  சூழ்நிலை காணப்படுகின்றது  என்றார்.

1 comment:

Powered by Blogger.