Header Ads



அடுத்த மாதம் இலங்கைக்கு வருகிறார் நரேந்திர மோடி...? வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மார்ச் மாதம்  இலங்கையில் நடைபெற உள்ள பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில்  பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரு விஜயங்களும் பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உடனான சந்திப்பு தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கையை வலுப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் விவாதித்ததாகவும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இருதரப்பும்  விரைவில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ள நிலையில் தொடர் விவாதங்களுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. Good, வடகிழக்கும் விஜயம் செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.