Header Ads



இலங்கையை உள்நாட்டுப் பிரஜைகள், ஆட்சி செய்ய வேண்டும் - சுமங்கல தேரர்


இலங்கையை உள்நாட்டுப் பிரஜைகள் ஆட்சி செய்ய வேண்டுமென உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் என குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை தாக்கல் செய்த மூவரில் ஒருவராக உலபனே சுமங்கல தேரர் திகழ்கின்றார்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றிருந்த போது உலபனே சுமங்கல தேரர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. அதற்கு பிரதான ஏதுவாக நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் நிதி அமைச்சர் ஒருவர் பதவி வகிப்பதாகும்.

நாட்டில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, எனினும் சுதந்திர தின நிகழ்வில் பாரியளவில் எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.

இதற்காக ஒரு பில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது. ஒரு புறம் தேவையற்ற செலவு செய்யும் அரசாங்கம் மறுபுறம் மக்கள் மீது அதனை சுமத்துகின்றது.

தகுதியற்றவர்கள் தகுதியற்ற இடங்களுக்கு நியமிக்கப்பட்டதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையே இதுவாகும்.

இந்த நாட்டை இலங்கைப் பிரஜைகள் ஆள வேண்டும், வேறு நாட்டு பிரஜைகள் ஆட்சி செய்வதனை நாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.