Header Ads



ஆசிரியை பஹ்மிதா சட்ட விரோதமாக திருகோணமலை கல்வி அலுவலகத்திற்கு மாற்றம் - ம.உ.ஆ.வில் முறைப்பாடு, சட்ட நடவடிக்கைக்கும் தீவிரம்


ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு  மறு அறிவித்தல் வரும் வரை இணைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட இணைப்பிற்கான கடிதம் முதலில் வலயக்கல்விப்பணிப்பாளரிடம் இருந்தும் பின்னர் மாகாணக்கல்விப்பணிப்பாளரிடம் இருந்தும் ஆசிரியைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தனது தற்காலிக இடமாற்றம் சட்டவிரோதமானது என்றும் தன்னை மீண்டும் இழுத்தடிப்புச் செய்வதற்கான நடவடிக்கை என்று கூறி ஆசிரியை பஹ்மிதா றமீஸ் தனது கணவரின் ஊடாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.குறிப்பிட்ட முறைப்பாட்டை  சமர்ப்பிக்கும் வேளை குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டமானி றாஸி முஹம்மத், அமைப்பின் சட்டப்பிரிவின் பொறுப்பாளர் முகைமின் காலித் மற்றும் சட்டத்தரணி சாதிர் அவர்கள் ஆஜராகி இருந்தனர்.

இதனைப்பற்றிக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முகைமின் காலித் அவர்கள்

“ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.அது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்றது.கல்வி அமைச்சு ஆசிரியை பஹ்மிதாவை ஷண்முகா வித்தியாலயத்திற்கு கடமையேற்குமாறு கடிதம் அனுப்பி இருக்க, அதனை நிறைவேற்றாமல் கல்வி அமைச்சை விட அதிகாரம் குறைந்த மாகாணப் பணிப்பாளர் எவ்வாறு கல்வி அமைச்சின் அதிகாரத்தை மேவ முடியும்.அத்தோடு ஒரு தேசிய பாடசாலை ஆசிரியரை இடமாற்ற வேண்டும் என்றால் கல்வி அமைச்சின் அனுமதியின்றி அதனை நிறைவேற்ற முடியாது.ஆனால் கிழக்கு மாகாண கல்விப் பணிமனை கல்வி அமைச்சின் அனுமதியைப் பெறாமல் ஆசிரியை பஹ்மிதாவை இடமாற்றியது சட்டவிரோதமானது”என அவர் குறிப்பிட்டார்.

குரல்கள் இயக்கம் குறிப்பிட்ட இடமாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக தயாராகின்றது என அதன் தவிசாளர் சட்டமானி றாஸி முஹம்மத் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.