Header Ads



பிரமிக்க வைக்கும் ஆசிரியை பஹ்மிதாவின் மனவுறுதி


“குடையைப் பிடித்த கரம் 

மனக் கொதிப்பைச் சுமந்த முகம்

கொடும் பசியில் தளர்ந்த நடை....”

நா.பார்த்தசாரதி எழுதிய குறுஞ்சி மலர் நாவலில் வீதியால் நடந்து வரும் பூரணியைப் பார்த்து அரவிந்தன் எழுதிய வரிகள் இவை. ஆசிரியை பஹ்மிதா வைத்தியசாலையில் இருந்து வெளிவரும் காணொளியைக் கண்ட போது என் மனதில் திடீரென்று பூரணியின் ஞாபகம் வருகிறது.

2018ல் ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றதற்காக வெளியேற்றப்பட்டதிலிருந்து இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வரைக்கும் குரல்கள் இயக்கம் பஹ்மிதாவின் உரிமை மீட்புக்காக பேசியும் வழக்காடியும் வருகிறது.

அந்த ஆசிரியையின் மன உறுதி எனக்குள் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்திவிட்டது.அடங்கியே வாழ்கின்ற சமுகம் நாம். ஒரு அநீதி  எம்மைச் சுற்றி நடைபெறும் போது ஒரு வெற்றுப் பெரு மூச்சோடு கடந்து செல்பவர்கள் நாங்கள். ‘ என் தலையில் குட்டப் போகிறாயா’ சரி குட்டிவிட்டுச் செல்’ என்று சொல்லிப் பழகியவர்கள். பொறுமைக்கும் கோழைத்தனத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைக் கூட நாம் விளங்குவதில்லை.எம்மைச் சுற்றி ஒரு தீங்கினைக் கண்டால் இது எனக்குரியதில்லை என்று கடந்து போபவர்கள்தான் எம்மில் அதிகம். எமக்கேன் வம்பு. எனக்கேன் தேவையில்லாத வேலை. இப்படித்தான் எமது வாழ்க்கை நகர்கிறது.

அதில் ஒரு முஸ்லிம் பெண் என்றால் சொல்லவா வேண்டும்? ஜெயகாந்தனின் நாவலின் பெயர் போல அம் முஸ்லிம் பெண்ணுக்கு ஒரு மனிதன், ஒரு வீடு. ஒரு உலகம். அவ்வளவுதான். காலையில் கண் விழித்தால் அடுப்பங்கரை. மாலையில் பாத்திரம், ஆடை கழுவல். நாள் முழுவதும் குழந்தைகள். அநியாயத்திற்கு ஒரு மூடப்பட்ட சமுகமாக வாழ்கிறோம் நாம். போருக்கு கணவனோடு சென்றவர்கள் எமது பெண்கள்.யுத்தம்பற்றி கலந்துரையாடப்பட்டவர்கள். இஸ்லாமிய வரையறைக்குள் அவர்கள் செய்ய அனுமதிக்கப்பட்ட பலதை இச்சமுகம் செய்யவிடாமல் தடுக்கிறது.

ஆனால் பஹ்மிதா றமீஸ் இந்த வரையறைக்கே ஒரு விதி விலக்கு. ஒரு குடும்பப் பெண். நல்ல மனைவி.பெரிய வீர சாகசக் குடும்பத்தில் பிறந்த வீர மங்கையுமல்ல.செல்வம் கொழிக்கும் குபேரனின் புத்திரியும் அல்ல. ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் முஸ்லிம் ஆசிரியை.அவ்வளவுதான். வாடகை வீடு.மாதச் சம்பளம்.மாலை நேர டியூசன். ஒரு நடுத்தரக் குடும்பம்.

ஷண்முகா இந்துக் கல்லூரியில் இருந்து வெளியாகிய நான்கு ஆசிரியைகளில் மூன்று பேர் விலகிக் கொண்டார்கள். இந்தச் சகோதரி பிடிவாதமாக இருந்தார். ‘ இது எனது உரிமை. இதை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். இதை நான் அனுமதித்தால் நாளை என்னைப் போல இன்னும் பலருக்கும் இது நிகழும்’ இந்த மன உறுதி, சமுகத்தின் மீதி இப்பெண்ணுக்கு இருக்கும் கரிசனை என்னை அதிர்ச்சியடையவைத்தது. ஏனெனில் இந்த சமுகத்தில் இப்படிப்பட்டவர்களை நான் கண்டதில்லை. நான் கண்டவர்கள் எல்லாம், ‘ இல்லை கணவர் வேண்டாம் என்கிறார்”, ‘ இன்னம் திருமணம் ஆகவில்லை எனக்கு.அதனால் பொலீஸ், வழக்கு என்று வருவதை எனது குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள்’, இல்லை வாப்பா ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்’ இவைகள்தான் நான் கேட்டவை.

பஹ்மிதா தனியே போராடிக் கொண்டிருக்கிறார்.எத்தனை ஏச்சுக்கள். எத்தனை அவமானங்கள். அவருடையை சம்பள அதிகரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர் தரமுயர்வு கிடைக்கவில்லை. மாறி மாறி பாடசாலைக்கு இடமாற்றினார்கள். முழு சமுகம் திரண்டு ஆர்ப்பாட்ட செய்தார்கள். அனைத்து உயர் அதிகாரிகளையும் எதிர்த்து, சொந்தப் பாடசாலையின் அதிகாரத்தை எதிர்த்து, குடும்ப எதிர்ப்பைச் சகித்து, இறுதியாக சொந்த  நகையை விற்று வழக்குப் பேசினார் அந்தப் பெண்.

நீங்கள் விரும்பும் பாடசாலைக்கு அனுப்புகிறோம். ஷண்முகா வேண்டாம்’ என்றார்கள் அதிகாரிகள். ‘ இல்லை. ஏன் ஷண்முகா வேண்டாம். அங்கு என் உரிமையை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் எனது உரிமையை நிலை நாட்டியே தீருவேன்’ என்றார் பஹ்மிதா. அந்த மன உறுதி யாருக்கும் இல்லாத ஒன்று.  

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் போதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் பலரில், தைரியத்தோடு எதிர்த்து நிற்கும் அந்த மனத்திடம் மிகப் பெறுமதியானது. அவளுக்கு தோளோடு தோள் நின்று, அனைத்து கடிதங்களையும் எழுதி, அந்த ஆசிரியையை கூட்டிக் கொண்டு கொழும்பெல்லாம் ஏறி இறங்கி அவரோடு உறுதுணையாக இருக்கும் அவரின் கணவர் ஆசிரியர் றமீசைப் பற்றி வேறு தனிக் கட்டுரை எழுதலாம்.

கழுத்தைப் பிடித்து நெரித்து, தொலைபேசியைப் பறித்து இந்தப்பாடசாலைக்கு வந்தால் உனக்கு இதுதான் நடக்கும் என்று எச்சரிக்க விரும்பினார்கள். கழுத்து வலியோடு நடக்க முடியாமல் வைத்தியசாலையில் விட்டு வீட்டுக்கு வந்து கேட்டாள் ‘ இனி அடுத்த கட்டம் என்ன?’ நான் அழுது விட்டேன். 

பஹ்மிதா. பாரதியின் அக்கினிக் குஞ்சு அவள்.அவளுடைய நியாயமான கோபத்தால் அநீதிகளின் சக்திகள் எரிந்து சாம்பலாய்ப் போகிறது.தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுக் குரலிழந்த செங்கேணி அவள். அவளின் தைரியத்தால் இருளர்களின் வாழ்வு ஒளிபெற்றது.

இன்று எனக்கு திருப்தியாக இருக்கிறது. இறப்பதற்கு முன்னர் எனது சமுகத்தில் இருந்தே எனது மகளுக்கு ஒரு முன்னுதாரணத்தைக் காட்ட முடிந்த திருப்தி அது.எனது இரண்டு பெண் பிள்ளைகளையும் அழைத்து பஹ்மிதாவின் கதையைச் சொன்னேன். “ நீங்கள் பஹ்மிதா டீச்சரைப் போல வரவேண்டும்’ என்று.

3 comments:

  1. பெருமை அளிக்கும் முன்உதாரணம்.
    தொடர்ந்தும் மனவுறுதியுடன் பயணித்து வெற்றி பெற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. Furkanhaj says:-கண்ணீரை வரவழைக்கும் கட்டுரை.பாரதியார் கண்ட புதுமை பெண் மீண்டும் தோன்றியுள்ளார்.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் இறைவன் அவரை கை விட மாட்டான்..

    ReplyDelete

Powered by Blogger.