Header Ads



கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ் பேராசிரியராக பதவியுயர்வு


( எம்.என் .எம். அப்ராஸ் )

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட  முதுநிலை விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம். ஐ. சபீனா இம்தியாஸ் அவர்கள் ( 23.12.2020 )ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெறுகின்றார்.

1997ம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீட உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் உதவி விரிவுரையாளராக பல்கலைக்கழக ஆசிரிய சேவையில்  இணைந்து கொண்ட இவர் 1998 ஆம் ஆண்டு நிரந்தர விரிவுரையாளர் நியமனம் கிடைக்கப் பெற்றார்.

தொடர்ந்து  சிரேஸ்ட விரிவுரையளர் தரம் II, தரம் I மற்றும் துறைத்தலைவர், கல்விசார் திணைக்களங்களின் தலைவர், இணைப்பாளர், மாணவர் ஆலோசகர், பணியாளர் மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவர் என பல்வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் பதவியுயர்வுகள் பல பெற்றதுடன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக தொடர்ச்சியாக 14.06.2010 முதல் 23.07.2016 வரை இருதடவைகள் கடமையாற்றி பிரயோக விஞ்ஞான பீடத்தின் அபிவிருத்திப்பணிகளுக்கு  தன்னை முழுதாக அர்ப்பணித்து சிறப்பாக செயலாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் சபீனா இம்தியாஸ் அவர்கள் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் முகமது இஸ்மாயில் ஆசிரியர்  மற்றும் சீனி முகமது சல்ஹா உம்மா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாக பிறந்த இவர் தனது ஆரம்ப மற்றும் உயர்  கல்வியினை  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றதுடன் 1989 ஆம் ஆண்டு நடை பெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியல் துறையில் சிறப்பு சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி கற்கை நெறிக்கு  தெரிவு செய்யப்பட்டார்

 1995 ஆம் ஆண்டு சிறப்பு தேர்ச்சியுடன் தனது விஞ்ஞானமானி கற்கை நெறியை பேராதனை பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்த இவர்  இரண்டு வருடங்கள் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதன் பிற்பாடு மீண்டும் பேராதனை  பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்பின் படிப்பான  விஞ்ஞான முதுமானி (Master of Science), முனைவர் (Doctor of Philosophy) கற்கை நெறிகளை திறம்பட பூர்த்தி செய்தார்.

தனது கலாநிதி கற்கை நெறியில் தேர்ச்சி மிகு ஆய்வினை மேற்கொண்டதற்காக பேராதனை விவசாய பட்டப் பின் கற்கை நிறுவகத்தின்(PGIA) உயரிய விருதான சேர் ஜோன் கொத்தலாவல தங்கப் பதக்கத்தினை (Sir John Koththalaavala Gold medal) வென்றார். PGIA இன் வரலாற்றில் இத்தகைய விருதுபெற்ற ஒரேயொருவர் இவரேயாவார்.

2006ஆம் ஆண்டு அமெரிக்காவின் fullbright ஆணைக்கு குழுவினால் புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக் கழகத்தில் தனது post-doctoral fellowshipஐ வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் கலாநிதியான இவர் தற்பொழுது அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பதும்  சிறப்பம்சமாகும்.

தற்பொழுது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தர நிருணய பிரிவின்  பணிப்பாளராக (Director, Centre for Quality Assurance) கடமையாற்றும்  இவர் பல்கலைக்கழத்தின் தரமிக்க கல்வி அபிவிருத்தி  செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டதன் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எமது இலங்கை திரு நாட்டின் ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியில் போட்டி போடக் கூடிய சூழலை ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும்.

 தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்தில் பல்வேறு பட்ட சிறப்பு மிக்க ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர்   அமெரிக்க உட்பட பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் கல்வி சார் பயணங்களை மேற்கொண்டு அங்கும் தனது ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்து தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நாமத்தையும் இலங்கை திருநாட்டின் கௌரவத்தையும் மேலோங்கச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். ­­

அதேவேளை பேராசிரியர் சபீனா இம்தியாஸ் அவர்கள் தான் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றிய காலப் பகுதியில் செய்த குறிப்பிட்ட முன்மொழிவுகள் மற்றும் செயற்திட்டங்கள்  (Proposal and scientific writing) மூலம் உருவானதுதான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.