Header Ads



தாம் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில், சமுதித்தவின் மனைவி தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்


சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று-14-  காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் சமுதித்த சமரவிக்ரம Hiru செய்திப்பிரிவுக்கு கூறுகையில்,

அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியில் ஒரு பாரிய சத்தம் ஒன்று கேட்டது, இந்த சத்தத்தால் நாங்கள் மூவரும் திடீரென விழித்துக்கொண்டோம், முதலில் திருடர்கள் வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தோம், அதன்பின்னர் மின்விளக்குகளை ஒளிரவிட்டபோது மீண்டும் ஒரு பலத்த சத்தம் கேட்டது, ஆனால் கீழே சென்று பார்க்க வேண்டாம் என சமுதித்த எனக்கு கூறினார் என்றார்.

கேள்வி - எத்தனை பேர் வந்தார்கள்? அவர்கள் யார் என தெரியுமா?

பதில் - இல்லை, இல்லை நாங்கள் அவர்களை காணவில்லை, மின்விளக்குகள் ஒளிராத காரணத்தால் சரியாக எங்களால் யாரென்று பார்க்க முடியவில்லை. ஆனால் கீழே உள்ள கெமராவில் பார்த்த பொழுது தான் மூவர் வந்துள்ளார்கள் என்பதனை அறிய முடிந்தது. 

மற்றொருவர் பாதுகாப்பு உத்தியோகத்தரை அச்சுறுத்தியதுடன், அவரை எங்களுடன் பேசவும் அனுமதித்திருக்கவில்லை, சாதாரணமாக வீட்டுக்கு யாரேனும் வந்தால் முதலில் பாதுகாப்பு உத்தியோகத்தரே எமக்கு அறியத்தருவார். 

ஆனால் இன்று வந்தவர்களில் ஒருவர் அவரை அச்சுறுத்தியுள்ளார், மூவர் வந்துள்ளனர் அவர்கனள அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. காரணம் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து, முழு முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இதுவரையில் அவர்கள் யாரென அடையாளம் காண முடியாமல் உள்ளதாக சமுதித்தவின் மனைவி தெரிவித்தார்.

இவ்வாறு வந்தவர்கள் கற்கள் மற்றும் கழிவுகள் அடங்கிய பொதிகளை வீசியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து காவல்துறையினரின் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளதையடுத்து காவல்துறையினர் சமுதித்தவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர்.


No comments

Powered by Blogger.