Header Ads



ஷண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள், அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது


(டாக்டர் நஜிமுதீன், கனடாவில் இருந்து)

 ஷண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள் அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது. அது இன்றைக்கு தமிழ் சமூகத்தையும் கூட ஒரு சோதனைக் களத்துக்குள் தள்ளியிருக்கின்றது. அவர்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் எல்லோரும் அறிந்த விடயம் ஒன்று தான் தனிமனித உரிமை குறித்த தெளிவு. நிறையவே சட்டத்தரணிகளையும் பிரபல்ய மிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் கொண்ட ஒரு சமூகம் அது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களைக் கூடத் தட்டிக் கேட்பதற்கு அந்த சமூகத்தின் சட்டத்தரணிகள் தான் முன் வருவார்கள், அதற்கென முன்னிறுத்தப்படுவார்கள். அந்த அளவுக்கு ஆற்றலும், மனித உரிமை குறித்த அறிவும், பல்லாண்டு கால அனுபவமும் பெற்றவர்கள் அவர்கள். இவைகள் எல்லாவற்றையும் விட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சல்களை எதிர்கொண்டவர்களும் அவர்கள்தான். 

ஆனால் ஷண்முகா சம்பவம் அவர்களைத் திக்கு முக்காட வைத்திருக்கிறது. வெளிப்படையாக உண்மையைப் பேச முடியாதபடி அவர்களின் குரல் வளையை நசுக்குகின்றது அந்த நிகழ்வு. அவர்களின் சமூகத்துக்கு இப்படி ஒரு சங்கடம் வருமாக இருந்தால் எல்லோரும் ஒன்றாகக் குரல் கொடுத்திருப்பார்கள். இதனை சங்கடம் என்றே நான் வர்ணிக்கின்றேன். ஏனென்றால் என்றைக்கும் இஸ்லாமிய சமூகப் பெண்ணுக்கு ஹபாயா என்பது மார்க்க அடையாளம் என்கின்ற நினைவே கிடையாது. அது உண்மையில் மார்க்க அடையாளமே அல்ல. 

நிஜத்தில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு ஆடை அடையாளம் ஒன்று கிடையாது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களுடன் பரந்து வாழ்கின்ற 180 கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியருக்கு அவர்களின் நாட்டின் ஆடையலங்காரமும் கலாச்சாரப் பாரம்பரியமுமே உடைகளாகின்றன. எமக்கு மிகவும் அருகில் இருக்கும் மிகப்பெரிய இஸ்லாமிய தேசம் இந்தோனேசியாவின் கலாச்சார உடை ஹபாயா அல்ல. இஸ்லாமியர்களுக்குரிய ஒரேயொரு கட்டளை ஆண்கள் குறிப்பிட்ட அளவுக்கும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கும் மறைத்துக் கொள்ளுங்கள் என்பதுவே. உங்கள் அழகும், மானமும், ஒழுக்கமும் பெறுமதி வாய்ந்தவை, அவற்றினை விளம்பரம் செய்து வியாபாரமாக்காதீர் என்பதுதான் அவர்களுக்கான வழிகாட்டல். அவர்கள் அதனை எந்த வழியிலும் பின்பற்றிக் கொள்ளலாம்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் ஹபாயாவை தங்கள் உடையாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மிகவும் முக்கியமான காரணம் அது மிகவும் இலகுவான ஓர் ஆடை.  உடம்பில் ஆரம்பித்து முகம், தலைமயிர், கூந்தல் என அலங்காரம் செய்ய விரயமாகின்ற நேரத்தை மீதமாக்கும் ஓர் அற்புதமான கண்டு பிடிப்பு. அணிந்திருக்கும் நேரமெல்லாம் எந்த இடத்திலாவது ஏதாவது வெளியில் தெரிகின்றனவா என்று எச்சரிக்கை உணர்வோடு இருப்பதற்கு அவசியமற்றது. ஏனைய ஆடைகளை விட அது அழகும் கவர்ச்சியும் குறைந்தது என்பதை அந்தப் பெண்கள் அறிவார்கள். அது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஒரு காலத்தில் சல்வார், பஞ்சாபி, என்றெல்லாம் ஆடைகள் அறிமுகமான போது அவற்றை முதலில் ஏற்றுக் கொண்டவர்களும் இஸ்லாமியப் பெண்களே. இன்று ஹபாயா அறிமுகமானவுடன் அதனை அவர்கள் இலகுவானவை என்கின்ற முறையில் தான் ஏற்றுக் கொண்டனர் என்பது ஏனைய இனத்தினருக்கு உண்மையில் தெரியாது. அது உண்மையில் முஸ்லிம்களின் கலாச்சார மற்றும் மார்க்கம் சார்ந்த உடையல்ல.

இது தவிர சாரி என்பதுவும் கூட தமிழர்களின் கலாச்சார உடையா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது.. கலாச்சாரம் என்பதுவும் பண்பாடு என்பதுவும் காலத்துக்குக் காலம் மாறக்கூடியவை. ஒரு காலத்தில் ஆண்கள் வெறும் கச்சையுடன் காலம் கழித்தனர். பெண்களுக்கு மார்புச் சீலை தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஆண்கள் வேஷ்டியும் நீண்ட சட்டையும் அணிந்தனர். ஆசிரியர்கள் ஆண்களாக மட்டுமே இருந்தனர். தலையில் முண்டாசு, இன்று அவர்களின் அடையாளம். எல்லாமே மாறி விட்டன. ஆசிரிய ஆண்களைப்  பார்த்து யாரும் வேஷ்டியில்தான் வரவேண்டும், வாலாமணிதான் எங்கள் கலாச்சாரம் என்று கூக்குரலிடவில்லை. வெள்ளையரின் கலாச்சார ஆடையாகிய நீண்ட கால் சட்டையும் சர்ட்டும், டையும், சப்பாத்தும் எமது கலாச்சாரத்துக்கு சாவுமணி என்று அபாயக் குரல் கொடுத்து அடித்துத் துரத்தவில்லை.

ஆரியரின் வைஷ்ணவ பண்பாட்டுப் படையெடுப்பு இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த பொழுது, இன்று தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்கின்ற சைவர்களும். வேத மதத்தினரும் சூத்திரர்கள் என்கின்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு எல்லாவிதமான கலாச்சார, பண்பாட்டு அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்தார்கள் என்பது வரலாறு. அவர்களை ஓரளவாவது பாதுகாத்து உரிமைகளை வழங்கியிருந்தனர் இஸ்லாமிய ஆட்சியாளர்கள். மார்பக வரி வசூலித்த திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற அடக்குமுறைகளுடன் எப்படிப்பட்ட போராட்டத்தை எமது சகோதர இந்து சகோதரிகள் நடாத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறுகள். அவற்றை நாங்கள் அறிவோம். அடக்குமுறைக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தை அடக்க நினைத்தல் அழகல்ல.

கலாச்சாரம் என்பதுவும் பண்பாடு என்பதுவும் மாற்றத்துக்குட்பட்டவை. இன்றைய இந்து சகோதரிகள் இன்னும் சில காலம் சென்ற பின்னர் முழுவதும் ஆங்கில ஆடைக் கலாச்சாரத்துக்கு மாறிவிட மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. அது ஏற்கெனவே மாறிவிட்டது. பாடசாலை விட்டு வீடு சென்றதுமே அவர்களின் ஆடைக் கலாச்சாரம் மாறிவிடுகின்றது. பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் மேலை நாடுகளிலும் பெரும்பான்மையான இந்துப் பெண்களின் உடை சாரிகள் அல்ல. 

இஸ்லாமியப்  பெண்கள் ஒரு விதமான இலகுவான ஆடையாக இருக்கின்றதே என்பதனால் தேர்ந்தெடுத்த ஹபாயாவுக்கு மத அடையாளம் பூசி, அதனை ஒரு பாரிய போராட்டத்தை நோக்கித் தள்ளியிருக்கின்றது ஷண்முகா வித்தியாலயம். தங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் அடையாளப்படுத்த விரும்புகின்ற இன்றைய நாகரிக உலகத்தில், அதனை அப்படியே புறக்கணித்து எல்லோரும் சாக்குப்பை என்றும், கோணிபில்லா என்றும் மாற்று இனத்தவராலும் ஊடகங்களாலும் அசிங்கமாக வர்ணிக்கப்படுகின்ற ஹபாயாவை விரும்பி அணிகின்ற அந்தப் பெண்களின் தியாகத்தை மதிக்காது, அவர்களை இப்படி அலைக்கழிப்பதை எந்த விதத்தில் நியாயம் என்று சொல்வது.

தனது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காத இஸ்லாமியப் பெண் கடந்த சில தசாப்த காலமாகத்தான் வெளியில் வந்து நடமாட ஆரம்பித்திருக்கின்றாள். அவளை இப்படி அடாவடித்தனத்தாலும் இரக்கமின்றியும் துவைத்தெடுத்து போலீஸ் நிலையத்திலும் நீதிமன்ற வாசலிலும் நிற்கவைத்து சித்திரவதை செய்வதென்பது மிகப் பெரிய அவலம் மட்டுமல்ல, துரோகமும் கூட. 

இன்றைய பஹ்மிதாவின் சம்பவம் கடலடியில் அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் உச்சி தானே தவிர, அதுவே முழுவதுமான நிகழ்வின் பிரதிபலிப்பல்ல. 

இன்றைய இஸ்லாமிய சகோதரி அவளது பாரம்பரியமிக்க பின்னடைவில் இருந்து தன்னை விடுவித்து, மார்க்க விழுமியங்களுக்கும் வரம்புக்கும் உட்பட்டு, தன்னை வெளியில் கொண்டு வரும்பொழுது, ஷண்முகா போன்று  இன்னும் எத்தனை மறை கரங்கள் பௌத்த கலாச்சாரம் என்றும் சிங்கள பண்பாடு என்றும், கிறிஸ்தவ கலாச்சாரம் என்றும் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றனவோ, அல்லது நெரித்துக் கொண்டிருக்கின்றனவோ நாம் அறியோம். 

ஷண்முகாவில் ஒன்று மட்டுமே போராடுகின்றது. ஏனையவை அடுத்தவருக்கும் சொல்லாமல் அடுப்படியில் கண்கலங்குகின்றனவோ என்பதனை நினைக்கும் பொழுது உண்மையில் கையாலாகாத எமது தலைமைத்துவங்களை சபிக்காமல் இருக்க முடியவில்லை. 

1 comment:

Powered by Blogger.