Header Ads



அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 முஸ்லிம்களுக்கு பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள்


2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்.

இதனை சிறப்பு அரசு வழக்குரைஞர் அமித் படேல் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 78 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாகிவிட்டார். இதையடுத்து மொத்த எதிரிகள் எண்ணிக்கை 77 ஆக இருந்தது. 70 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 49 பேரை குற்றவாளிகள் என பிப்ரவரி 8ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழும் கொலைக் குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழும் இவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பை அளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் இந்த சம்பவத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஜுலை 26, 2008 அன்று அகமதாபாத் நகரில் 70 நிமிடத்தில் 21 குண்டுகள் வெடித்தன. குறைந்தது 56 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தியன் முஜாஹிதீன், ஹர்கத்- உல் -ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றன. இம்ரான் ஷேக், இக்பால் ஷேக், சம்சுதீன் ஷேக், கியாசுதீன் அன்சாரி உள்பட 49 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

குண்டுவெடிப்பின் பின்னணி என்ன?

2008 அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மொகமது இசார் என்ற 7 வயது சிறுவனின் தந்தை ஜலாலுதீன் காலிஃபா (நடுவில் இருப்பவர்) இறுதிச் சடங்கின்போது கதறி அழுகிறார். அவரது உறவினர்கள் அவரைத் தேற்றுகிறார்கள்.

2008 அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மொகமது இசார் என்ற 7 வயது சிறுவனின் தந்தை ஜலாலுதீன் காலிஃபா (நடுவில் இருப்பவர்) இறுதிச் சடங்கின்போது கதறி அழுகிறார். அவரது உறவினர்கள் அவரைத் தேற்றுகிறார்கள்.

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரத்தால் சிறுபான்மை முஸ்லிம்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக சிமி என்று அறியப்படும் ஸ்டூடன்ட் இஸ்லாமிக் மூவ்மென்ட் இன் இந்தியா என்ற அமைப்பு கருதியது. இதற்குப் பழிவாங்குவதற்காக இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை அது தோற்றுவித்தது.


2008 தொடர் குண்டுவெடிப்பில் அதிக எண்ணிக்கையிலான குண்டுகள் மணி நகர் சட்டமன்றத் தொகுதியில் வெடித்தன. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நரேந்திர மோதி. அப்போது அவர் மாநில முதல்வராகவும், இப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும் இருந்தனர்.

நகரின் பல இடங்களிலும் குண்டுகளை வைத்த தீவிரவாதிகள் ஓர் உத்தியைக் கையாண்டார்கள். ஓரிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் நேரத்தில் மருத்துவமனைக்கு அருகே குண்டுவெடிக்கும் வகையில் அவர்கள் வெடிகுண்டு வெடிக்கும் நேரத்தை செட் செய்தார்கள். அதைப் போல சூரத் நகரிலும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். குண்டு வெடிக்க சதிச் செயலில் ஈடுபட்டதாக அகமதாபாத்தில் 20 முதல் தகவல் அறிக்கைகளும், சூரத்தில் 15 முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த 35 முதல் தகவல் அறிக்கைகளையும் ஒன்றாக சேர்த்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம், வெடிபொருள்கள் சட்டம் ஆகியவற்றின் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வழக்கு தொடர்பான முக்கியத் தகவல்கள்

1,100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் இன்னும் பிடிபடவில்லை. பின்னால் கைது செய்யப்பட்ட சிலர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய சந்தேக நபரான அப்துல் சுபஹான் குரேஷி 2018ம் ஆண்டு புதுதில்லி சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் முன்பு பல ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்தவர். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் நிதிப் பிரிவுக்கு இவர் பொறுப்பாக இருந்தார். அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் இவர்தான் என்று குற்றம்சாட்டப்பட்டது.

வெடிபொருள்களை கடத்திச் செல்லவும், குண்டுகளை வைக்கவும், அஃப்சல் உஸ்மானி என்பவர் ஒரு காரை திருடி பயன்படுத்தினார். 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். ஆனால், ஒரு மாதம் கழித்து மீண்டும் பிடிபட்டார். BBC

No comments

Powered by Blogger.