Header Ads



1965 இல் கட்டப்பட்ட பள்ளிவாசலை, சிதைந்து போக இடமளிக்கலாமா..? (உணர்வுள்ள இஸ்லாமிய சொந்தங்களே இது உங்களின் அவசர கவனத்திற்கு)

- எம். அப்துல்லாஹ் -


இலங்கையின் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்கு வாழும் சகோதரர்களிடம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள்? அவ்வாறு வாழ்வதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? தொல்லியல் சான்றுகள் உண்டா? அங்கு பார்க்கக் கூடிய இடங்கள் எவை என்று கேட்ட போது வெள்ளைக்கடற்கரையைப் பற்றி மக்கள் கூறினார்கள். பாதையை அறிந்து கொண்டு அங்கு சென்று பார்த்த போது நெஞ்சம் குமுறி அழும் நிலை உருவாகியது. 

1965 ஆண்டு கட்டப் பட்ட பள்ளிவாசல் கடல்  உப்பு காற்றின் தாக்கத்தினாலும் பராமரிப்பு இன்றி காணப்படுவதனாலும் படிப்படியாக இடிந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றி விசாரித்த போது அந்தக் கட்டிடத்தின் தூண்களுக்கு உள்ளேயும் ஸ்லப்புகளுக்கு உள்ளேயும் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து சிதைந்து விட்டதை ஒருவர் காட்டினார். அதனால் சீமெந்து தூண்களும் சிதைவடைந்து கட்டிடமும் தூண்களும் விரிசல்களுக்கு உள்ளாகி என்நேரமும் இடிந்து விழக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.  கட்டிடத்தின் நிலமையை பார்த்த பிறகு உள்ளே நின்று தொழக் கூட அச்சமாக இருந்தது. 

நூற்றுக் கணக்கான யாழ்ப்பாண முஸ்லிம்கள் அப்பிரதேசத்தில் காணிகளைக் கொண்டுள்ளனர் என்றும் அங்கிருந்து சுமார் 15 கிலொமீட்டர் தொலைவில் வசித்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் பொழுது போக்குக்காக அங்கு வந்து கடலில் குழித்து சமைத்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதாகவும் சிலர் அங்கே சில நாட்கள் தங்கி மகிழ்வதாகவும் அறிந்து கொண்டேன். யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப் பட்டு மீள்குடியேறிய பின்னர் வெளியூர்களில் வசிக்கும் அவர்கள் கூட அங்கு குடும்பமாக வந்து தங்கி மகிழ்ந்து செல்வதாக அறியக் கிடைத்தது. 

பள்ளிவாசலுக்கு வடமேற்கிலே பள்ளிவாசலில் தொழும் இறுதி இடத்திலிருந்து சுமார் 50 அடி தள்ளி ஒரு ஸியாரம் உள்ளது. அது 1592 இல் மரணித்த ஒரு நல்லடியாரினுடையது என்பதாக வாய்வழிக் கதையுள்ளது. அதனுடன் தொடர்பில்லாத வகையிலேயே பள்ளிவாசல் 50 அடி இடப்புறமாக தள்ளியும் மையத்து அடக்கப் பட்டுள்ள இடத்துக்கு முன்புறமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. 


இந்த பள்ளிவாசலின் பிரதான கட்டிடத்தினுள் அதாவது தொழுமிடத்தினுள் இந்த ஸியாரம் சம்பந்தமான எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப் படுவதில்லை என்பதிலிருந்து அந்தப் பள்ளிவாசல் முற்றுமுழுதாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை வணங்கும் தூய்மையான இடம் என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

இது யாழ்ப்பாண முஸ்லிம்களுடையது மட்டுமல்ல இலங்கை முழுவதும் வாழும் முஸ்லிம்களின் ஒரு சொத்தாகும். ஆபத்தற்ற குளிக்கக் கூடிய பேரலைகள் அற்ற கடற்கரை, அருகே நண்ணீர் கிணறுகள், தொழுவதற்கு பள்ளிவாசல், இளைப்பாற நல்ல மரநிழல்கள் உண்மையில் இவ்வாறான சகல அம்சங்களும் பொருந்திய ஒரு இடம் முஸ்லிம்களுக்கு இலங்கையில் வேறெங்கும்  இல்லை. 

இந்த இடத்தை அபிவிருத்தி செய்தால் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தையும் தொழிலையும் வழங்க முடியும். மீன்பிடி விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கடல் அடைப்பு மீன் வளர்ப்பு தென்னந் தோட்டம் போன்ற பல்வேறு தொழில்களை அங்கு உருவாக்க முடியும். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறந்த இடம் அலங்கோலமாக காட்சியளிக்கின்றது. அதிலும் இறையில்லம் பள்ளிவாசல் ஒவ்வொரு துண்டாக உடைந்து விழுந்து கொண்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டால் அது அந்த ஊரின் குடியிருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும். 

எனவே இந்த பள்ளிவாசலை புனரமைக்க மீளமைக்க இலங்கை முஸ்லிம்களே முன்வாருங்கள். நான் எஞ்சினியரிங் துறையிலும் பணியாற்றியுள்ளதால் இந்த பள்ளிவாசலிம் கட்டிடம் முற்றாக உடைக்கப் பட்டு புதிய அத்திபாரம், புதிய கம்பிகளுடனான தூண்கள், ஸ்லப்கள் என்பன போடப் பட வேண்டும். 40 அடி அகலமும் 70 அடி நீளமும் கொண்ட இந்த பள்ளிவாசலை மீளமைக்க சுமார் 24 தூண்கள் தேவைப் படுகின்றது. சுமார் 300 பக்கட் சீமெந்து தேவை. கம்பிகள் 10 மில்லிமீட்டர் மற்றும் 12 மில்லிமீட்டர் அளவுகளில் 450 இக்கும் மேல் தேவை என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. மண் மற்றும் புலொக் கற்கள், சிறிய கற்கள் போன்றனவும் தேவைப் படுகின்றது. தற்போது அதிகரித்து வரும் விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த பள்ளிவாசலை அமைத்து அழகான டோமும் டகோபாவும் கட்டுவதற்கு ஏறக்குறைய 7 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என வேலணை பிரதேச சபை முன்னர் கணக்கெடுப்புச் செய்திருந்தது. 

எனவே இதனைக் கட்டிக் கொடுக்க விருப்பமுள்ளோர், யாழ் முஸ்லிம் இனையத்தளத்தை தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தால், வேலைகளை ஆரம்பிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். (பொறுப்புமிக்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் வழங்கப்படும்)

பள்ளிவாசலில் உடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள் விழுந்த தூண்கள் ஸ்லப்கள் போன்றவற்றின் படங்கள் தரப் பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.