10, 11 ஆம் தரம் இஸ்லாமிய பாடநூல்களிலே பல திருத்தங்கள் - முஸ்லிம் அதிகாரிகள் மேற்பார்வை, ஏப்ரலுக்கு முன் விநியோகம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்லாமிய சமய பாடநூல்கள் திருத்தங்களுடன் மீள அச்சிடப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமையவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெரும விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அப்பாடநூல்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தும்படியும், அப்பாடநூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பின் உடனடியாக அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் அண்மையில் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடநூல் நேரடியாக விநியோகிக்கப்படும் பாடசாலை அதிபர்களுக்கு சுற்று நிருபமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பாடநூல்கள் மீளதிருப்பிப்பெற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏப்ரல் மாதத்துக்கு முன்பு புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் பரிந்துரைகளுக்கமைய, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இஸ்லாமிய கற்கைகளுக்குப் பொறுப்பான முஸ்லிம் அதிகாரிகளின் சிபாரிசுகளின் படி இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தின் இஸ்லாமிய கற்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒருவரான ஐ.ஏ.எம்.அப்சானைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“இஸ்லாமிய சமய பாடநூல்களில் அடங்கியுள்ள சில சர்ச்சைக்குரிய கருத்துக்களே திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பாடநூல்களில் அடங்கியுள்ள சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. சில வசனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத் திருத்தங்கள் இஸ்லாம் பாடத்திட்டம் மற்றும் மார்க்கத்துக்குப் பாதிப்பில்லாத வகையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அச்சகத்தில் ஒரு தொகை பாட நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அந்தப் பாடநூல்களில் திருத்தங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஏற்கனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பாடநூல்கள் மீளப்பெற்று களஞ்சியத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்நூல்கள் மீண்டும் திருத்தங்களுடன் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட மாட்டாது.
விஷேட உத்தரவுகளின்படியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இத்திட்டத்தை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 10 ஆம், 11ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் சமய பாடநூல்களிலே பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை 6ஆம், 7ஆம் தரங்களுக்குரிய பாடநூல்களில் ஒரு சில திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் அகற்றப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன’ என்றார்.- Vidivelli
Post a Comment