Header Ads



“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில், முன்வைக்கப்பட்ட சிறந்த யோசனை


இலங்கையில் காணப்படும் கல்வி முறைமையின் கீழ், திறமையான பிள்ளைகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ மாணவர்களாக மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழையும் போது, உயர்தரத்தில் சித்தியடையாத இன்னொரு தரப்பு பிள்ளைகள், வேறு வழிமுறைகளின் கீழ் மருத்துவக் கல்வியைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று, பொதுப்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்தார். 

“ஒரே நாடு ஒரே சட்டம்” எண்ணக்கருவை யதார்த்தமாக்கிக்கொள்ள வேண்டுமாயின், அனைவருக்கும் சமமான கல்வி முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். தற்போது நிலவும் ஒரு முறைமையின் கீழ், மாணவரொருவர் 22 வயதில் மருத்துவராக உருவாக முடியும். அதேவேளை, இன்னொரு முறைமையின் கீழ் அந்த வாய்ப்பு 28 வயதிலேயே ஒரு மாணவருக்குக் கிடைக்கின்றது. அதனால், அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும், சமமான வயதில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றக் கூடிய கூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறுமாயின், இந்தப் பிரச்சினைக்கு சாதாரண தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினால் பொதுமக்களின் கருத்துச் சேகரிக்கும் பணிகள், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே, வசந்த அல்விஸ் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்தச் செயலணியின் முன்னால் கருத்துத் தெரிவித்த பொதுப்பணி மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டொக்டர் கோல்ட்டன் பெர்ணான்டோ அவர்கள், “குறைந்த வளங்களைக் கொண்ட எம்மைப் போன்ற நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்ய முடியும்” என்று யோசனை முன்வைத்தார். 

வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சியுடன், அடிப்படை மனிதத் தேவையும் அதிகரிக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சி வேகத்தால், இலங்கை போன்ற பௌதீக வளங்கள் குறைவாகவுள்ள மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச பாடசாலைகளில் கற்பிக்கப்படும் சில சமயப் பாடநெறிகளுக்கான ஆசிரியர் கையேடுகளில், வன்முறை மற்றும் ஒழுக்கமற்ற போதனைகளைக் கற்பிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இவை, சிறுவர்களின் மனங்களில் வன்முறை எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்றும் குறிப்பிட்ட கோல்ட்டன் பெர்ணான்டோ அவர்கள், இவ்வாறான போதனைகளை ஆசிரியர் கையேடுகள் மற்றும் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் செயலணியிடம் வலியுறுத்தினார். 

அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில், அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் இதற்கான கலந்துரையாடல்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று, பொதுப்பணி மன்றத்தின் உறுப்பினர் குழாம் வலியுறுத்தியது.

இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்துவது தொடர்பிலான பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் எண்ணப்பாடுகளைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் நாட்டுக்குள் செயற்படுத்தக்கூடிய எண்ணக்கருப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கும் பணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதிச் செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்செயலணியானது, பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நடவடிக்கைகளை, வடக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பித்தது. 

பின்னர், கிழக்கு, மத்தி, ஊவா, தெற்கு மாகாணங்களில் உள்ள மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்ட அதேவேளை, பல மாகாணங்களில் இருந்து வருகை தரும் மக்கள், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து, செயலணியிடம் தமது கருத்துகளையும் யோசனைகளையும் பதிவு செய்து வருகின்றனர். 

செயலணியைத் தொடர்புகொண்டு நேரமொன்றை ஒதுக்கிக்கொண்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள அலுவலகத்துக்குச் சென்று கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 

இந்த ஜனாதிபதிச் செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர், ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பானீ வேவல ஆகியோரும் அதன் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

29.01.2022


4 comments:

  1. இனத்துவேசியான இந்த அபஸசணையை உடனடியாக பதவியிலிருந்தும் நீக்கி சிறைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என யாராவது ஆலோசனை கூறமாட்டார்களா?

    ReplyDelete
  2. இனத்துவேசியான இந்த அபஸசணையை உடனடியாக பதவியிலிருந்தும் நீக்கி சிறைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என யாராவது ஆலோசனை கூறமாட்டார்களா?

    ReplyDelete
  3. இனத்துவேசியான இந்த அபஸசணையை உடனடியாக பதவியிலிருந்தும் நீக்கி சிறைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என யாராவது ஆலோசனை கூறமாட்டார்களா?

    ReplyDelete
  4. Bankrupt politics made captive as a leader. Shame.

    ReplyDelete

Powered by Blogger.