பொரளை தேவாலய கைக்குண்டு வழங்கிய, ரனாலே ருவனை தேடி விசாரணைகள் ஆரம்பம்
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் ரனாலே ருவன் என்பவரை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிலியந்தலையை சேர்ந்த மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக குறித்த கைக்குண்டு தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரால் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டுள்ளமை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பனாமுர பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவராலேயே கைக்குண்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தன்று காலை தேவாலய பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்த நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
பெல்லன்வில விகாரை மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் என்பவற்றில் கைக்குண்டை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான மருத்துவரின் ஆலோசனைக்கமைய இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனைவியின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் இந்த செயற்பாடு நடந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட வைத்தியரின் மகனும் சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஓஷல ஹேரத், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது தந்தைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தேவாலயத்தின் 03 ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், பொலிஸ் விசாரணை தொடர்பாக திருப்தியடைய முடியாது என கூறினார்.
தேவாலயத்திற்கு முற்பகல் வேளையில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர் தொடர்பில் CCTV கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Post a Comment