எரிபொருளை பற்றாக்குறையை தீர்க்க, அரசாங்கத்திடம் கம்மன்பில முன்வைத்துள்ள யோசனைகள்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையொன்றை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
வாரத்தில் ஒரு நாள் தொலைக்காணொளி தொழில்நுட்பம் மூலம் பாடசாலைகளை நடத்தப்பட வேண்டும் எனவும், வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறக்க வேண்டும் எனவும் அமைச்சர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு முன்மொழியும் அமைச்சர், கொழும்புக்கு வரும் வாகன எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் கூட்டங்கள், கலந்துரையாடல்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை மட்டுப்படுத்தவும், பிரதேச செயலாளர்களை கொழும்புக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தவும், தொலைக்காணொளி தொழில்நுட்பத்தினூடாக கலந்துரையாடல்களை நடத்துமாறு அமைச்சர் கம்மன்பில யோசனை முன்வைத்துள்ளார்.
வர்த்தக வங்கியினால் பெறப்படும் அந்நிய செலாவணியில் மூன்றில் ஒரு பங்கை மத்திய வங்கிக்கு மாற்றி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவற்றை அரச நிறுவனங்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.
எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்ட போதிலும், அதன் கேள்வி தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சுற்றுலாப் பயணங்கள், உறவினர்களின் வீடுகளுக்கு செல்லுதல் போன்றவைகள் அதிகரித்துள்ளமையும் எரிபொருள் அதிகரிப்புக்கு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையுடன் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பை சமாளிப்பதற்கான யோசனையொன்றை மின்சக்தி அமைச்சும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment