Header Ads



கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு, எச்சந்தர்ப்பத்திலும் நாம் விரும்பவில்லை


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் விரும்பவில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கண்டிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் பேசிய அவர், “கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராக கொண்டுவருவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது.

சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அரச தலைவருக்கு ஆதரவுகளை வழங்கியிருந்தனர். அதனால் தான் கோட்டாபய ராஜபக்ச மிகப் பெரிய வெற்றியினை அடைந்தார். அவரின் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவதற்கும் எமது கட்சி பங்களிப்பு செய்திருந்தது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்துவதற்கோ அல்லது அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கோ எங்களுக்கு எந்த தேவையும் இல்லை.

நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினைத் தொடங்கியுள்ளோம். நாட்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த, பல தலைவர்களை உருவாக்கிய கட்சியினை வீழ்ச்சியடைய விடமாட்டோம்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது கட்சிக்குள் யாரும் வரலாம். எவருக்கும் தடையில்லை.

இன்று மக்கள் எமது கட்சி தொடர்பிலும், தேர்தல் கூட்டணி தொடர்பிலும் பேசத் தொடங்கியுள்ளனர். ஆகவே எதிர்கால தேர்தல்களில் எமது கட்சி மக்களின் விருப்பினை வெற்றி கொள்ளும். அதற்கு ஏற்ற வேலைகளை நாங்கள் செய்து வருகின்றோம்.

நாட்டில் அரசாங்கத்தை தோல்வியடைச் செய்வது எமது நோக்கமல்ல. மக்களையும் நாட்டையும் மீட்கும் வேலைத்திட்டத்திற்கு என்றும் உறுதுணையாக அரசாங்கத்துடன் இருப்போம்” என்றார்.  

No comments

Powered by Blogger.