Header Ads



ஞானசாரர் தலைமையிலான செயலணியை முஸ்லிம்கள் புறக்கணிப்பது, விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்துமா..?


- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் -

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி யானது நாடளாவிய ரீதியில் அமர்வுகளை நடாத்தி வருகின்றது என்பதை  ஊடகங்கள் மூலம் அறியக் கிடைக்கின்றன. இந்த செயலணி எப்போது எங்கே தனது அமர்வுகளை நடத்தப் போகின்றது என்ற விடயம் பொது மக்களுக்கு சரியாக சென்றடைவது இல்லை. மக்களிடையே கருத்துக்களை பதிவு செய்து பின்னர் ஊடகங்களில் வெளிவரும் வரை பெரும்பாலானோருக்கு எதுவுமே தெரியாது. இந்த செயலணி முஸ்லிம் தனியார் சட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்வதனை அடிப்படையாகக் கொண்டு தனது பரிந்துரைகளை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கும் என்பதே பலரினதும் அபிப்பிராயம்.

அமர்வுகளில் முஸ்லிம் மக்கள் சார்பாக கருத்துக்களை வழங்கிய பொதுமக்கள் பெரும்பாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பாரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்கு சார்பாக தான் சாட்சியங்களை வழங்கியுள்ளனர் . செயலணியின் நோக்கத்திற்கு அல்லது அதன் தலைமைத்துவத்தின் நோக்கத்திற்கு சார்பான கருத்துக்களை வழங்கும் எமது சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மட்டும்தான் உள்வாங்கப் படுகின்றனவா அல்லது சார்பான கருத்துக்களை கொண்டவர்கள் மட்டும் தான் அமர்வுகளுக்கு செல்கின்றனரா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

ஏனென்றால் இறுதியில் இந்த செயலணி வழங்கப்போகும் பரிந்துரையில் நாடளாவிய ரீதியில் அமர்வுகளை நடத்திய போது மகருத்துக்கள் வழங்கிய முஸ்லீம்கள், சட்டத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு சார்பான கருத்துக்களை மட்டுமே கூறியுள்ளமையானது பெரும்பாலான முஸ்லீம்கள் மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர் என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில்  அமைந்திருப்பது ஒரு ஆபத்தான நிலையாகும்.

ஆளும் கட்சியானது முஸ்லிம் தனியார் சட்டத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தில் இயங்குகின்றது என்று வைத்துக்கொண்டாலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்த எதிர்க்கட்சி தனது கடமையை இவ்விடயத்தில் சரியாக செய்துள்ளதா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த செயல் அணியின் அமர்வுகளின் போது  முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் தனியார் சட்டத்திற்கு மாற்றங்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருத்துக்களை பொதுமக்கள் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனவா? இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் முஸ்லிம் மக்களை சரியாக வழி நடத்தி உள்ளனவா? அல்லது முஸ்லீம் நலன்களை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கங்கள் தெளிவுபடுத்தி உள்ளனவா? சிந்திக்க வேண்டிய கட்டாய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.

தொடர்ந்தும் முஸ்லிம் வாக்குகளை தமது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் செயல்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் கட்டாயம் பூரிப்பு அடையும். இதில் எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.

 செயலணியின் அமர்வுகள் நடைபெறும் போது அதில் தமது கருத்துக்களை வழங்காமல் மௌனமாக இருந்துவிட்டு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர் அறிக்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டிய கருத்துக்கள் மட்டுமே உள்ளன என்று அறிக்கை விடாமல் எதிர்க் கட்சிகளும், இயக்கங்களும் சமூக ஆர்வலர்களும் தமது கடமையை இறுதிக் கட்டத்திலாவது சரியாக செய்ய வேண்டும். பாராளுமன்றத்தில் கூக்குரலிடுவது மட்டுமல்ல எதிர்க்கட்சியின் வேலை. தம்மை  நம்பி வாக்களித்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அவற்றின் கடமை.

செயலணியின் அங்கத்தவர்கள் பொருத்தமில்லை என்பது வேறு விடயம். அதற்காக அதில் தமது கருத்துக்களை பதியாமல் விடுவதானது பல விரும்பத்தகாத பின்விளைவுகளை தரலாம். இந்த விடயத்தில் உலமாக்கள் இறுதிக்கட்டத்திலாவது எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றிகள்.

23.01.2022

1 comment:

  1. சிந்தனையும்,ஓரளவுக்கேனும் நன்மை தீமையை விளங்கிக் கொள்ளும் சாதாரண அறிவுள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் இவனுடைய செயல்பாட்டைப் பூரணமாக நிராகரிக்க வேண்டும். இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு மண்ணை அள்ளிக் கொட்டும் இந்த மென்டலின் அத்தனை முயற்சிகளையும் ஜனநாயக ரீதியாக இந்த நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்.அது அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய நல்ல முயற்சி என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.