போர்ட் சிட்டியில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி, வீடியோக்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை
போர்ட் சிட்டியில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளில் உண்மையில்லை என கொழும்பு போர்ட் சிட்டி நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு போர்ட் சிட்டி நிர்வாகத்தின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
புதிதாக திறக்கப்பட்ட போர்ட் சிட்டி மெரினா நடைபாதையைப் பயன்படுத்துவதற்கு பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததுள்ளன.
தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும்/அல்லது வணிகரீதியான படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றுக்கு கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது .
இதுபோன்ற படமாக்கல்/புகைப்படம் எடுப்பது உல்லாசப் பாதைக்கு வரும் பிற பார்வையாளர்களின் தனியுரிமையை மீறுவதாகவும் அவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், படமெடுப்போரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மெரினா நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். கட்டணம் செலுத்திய படப்பிடிப்பையும் புகைப்படக்கலையையும் காலை 9 மணிக்கு முன் அல்லது கோரப்பட்ட பிற நேரங்களுக்கு முன் மேற்கொள்ளலாம்.
தனிப்பட்ட விழாக்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது ஃபேஷன் விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது வணிகப் படப்பிடிப்பின் மற்ற வகைகளின் படப்பிடிப்பு/புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் பொருந்தும்.
இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment