Header Ads



பாரம்பரிய எதிர்க்கட்சி என்ற, வகிபாகத்தை புரட்டிப் போட்டுள்ளோம் - சஜித்


அரசாங்கத்தின் வேலையை அரசாங்கம் செய்வதும்,எதிர்க்கட்சிகள் எதிர்கட்சிகளின் வேலைகளைச் செய்வதுமே பொதுவாக நடப்பதாக இருந்த போதிலும்,ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக பாரம்பரிய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்தை புரட்டிப் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து வளங்களையும் விற்று, மக்களை துன்பத்திற்கு மேல் துன்பத்தை ஏற்ப்படுத்துவதையே அரசாங்கம் செய்து வருகிறது என்ற போதிலும்,ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அந்தப் பணியில் இணைந்து,மக்களுக்குச் செய்யக்கூடிய சேவையை செயலில் நிரூபிக்க வேண்டும் என அதிகாரத்தைப் பெற கனவு காணும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,அவ்வாறு செய்யாமல் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் காரணமாக உலகம் முழுவதும் வறுமையின் அடிமட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதிலும் உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையிலும் இதே நிலைதான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்வதே இப்போது நடப்பதாக இருந்தாலும், நாட்டிற்கு பெறுமானம் சேர்ப்பதையே நாங்கள் செய்கிறோம் எனவும் தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு”மற்றும் ‘ஜனசுவய’ ஆகிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணைந்தாக பொரலஸ்கமுவ வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

12 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை எதிர்க்கட்சித் தலைவர் இன்று (25) மாவட்ட வைத்திய அதிகாரி இனோகா தீபானி லியனகேவிடம் இவ்வாறு வழங்கி வைத்தார்.

மக்களின் நலனுக்காகவே முச்சக்கர வண்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக டெங்கு ஒழிப்பு திட்டம், புகை ஏற்படாத செயற்பாடுகள்,கொரோனாவுடன் தொடர்புடைய தொற்றுநோயாளர்களைக் கண்டறிதல், குடும்ப சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல செயற்ப்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.